இந்தியா

மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: சோனம் ரகுவன்ஷியின் ஜாமினுக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

கைதுக்கான சரியான காரணங்கள் சோனத்திற்கு தெரிவிக்கப்படவில்லை என்ற நடைமுறை குறைபாட்டை சுட்டிக்காட்டி கீழ் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

கடந்த ஆண்டு இந்தியாவையே உலுக்கிய, மேகாலயா தேனிலவு கொலைவழக்கின் முக்கிய குற்றவாளியான சோனம் ரகுவன்ஷிக்கு வழங்கப்பட்ட ஜாமினுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சோனமுக்கு ஜாமின் வழங்கி ஷில்லாங் நீதிமன்றம் ஏப்ரல் மாதம் பிறப்பித்த உத்தரவை, ஜூன் 29 அன்று உயர் நீதிமன்றம் உறுதி செய்ததைத் தொடர்ந்து, மாநில அரசு அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது.

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தனது ஆட்சேபனைகளை வெளிப்படுத்தியபோதிலும், சோனம் ரகுவன்ஷி ஏற்கனவே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, நிபந்தனைகளின்படி தற்போது வெளியில் இருப்பதை குறிப்பிட்டு,

ஜாமினுக்கு உடனடித் தடை விதிக்க நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.

விசாரணையின் போது, ​​மேகாலயா அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தொழிலதிபர் கேத்தன் அகர்வால் கொலை வழக்கையும் உதாரணமாக கூறி வாதங்களை முன்வைத்தார்.

மேகாலயா தேனிலவு கொலை வழக்கு

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த சோனம் ரகுவன்ஷி மற்றும் ராஜா ரகுவன்ஷிக்கு கடந்த ஆண்டு மே.11ம் தேதி திருமணம் நடைப்பெற்றது. இதனைத்தொடர்ந்து மே 20ம் தேதி மேகாலயாவின் சோஹ்ராவிற்கு இருவரும் தேனிலவுக்கு சென்றனர்.

தேனிலவுக்கு சென்றவர்கள் மே.23அன்று தாங்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து வெளியேறினர். ஆனால் வீடு திரும்பாததால் உறவினர்கள், இருவரும் காணவில்லை என போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய போலீசார், ஜூன் 2ம் தேதி 200 அடி பள்ளத்தில் இருந்து ராஜா ரகுவன்ஷியை பிணமாக கண்டறிந்தனர்.

இதனையடுத்து அவரது மனைவி சோனம் என்ன ஆனார் என கேள்வி எழு, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் தொலைபேசி சிக்னலை வைத்து சோனத்தை உ.பி.யின் காசிபூரில் கண்டறிந்தனர். அங்கு அவரிடம் போலீசார் விசாரிக்க முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.

தொடர் விசாரணையில் தனது காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை அமைத்து ராஜா ரகுவன்ஷியை சோனம் போட்டு தள்ளியது தெரியவந்தது. இதனையடுத்து சோனமும், அவளது காதலர் ராஜ் சிங் குஷ்வாஹாவும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சுமார் 10 மாதங்கள் நீதிமன்றக் காவலுக்கு பிறகு, கடந்த ஏப்ரல் 27ம் தேதி சோனத்திற்கு ஷில்லாங் மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

சோனத்தின் கைதுக்கான காரணங்களை புலனாய்வு அமைப்பு சரியாகத் தெரிவிக்கத் தவறிவிட்டது என்று, நடைமுறை குறைபாட்டை சுட்டிக்காட்டி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

காவல்துறையின் கைது ஆவணங்களில் கொலைக்கான சட்டப்பிரிவான 103(1)-க்கு பதிலாக 403(1) எனத் தட்டச்சுப் பிழையாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர் மேகாலயா அரசு இந்த ஜாமினை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால் உயர் நீதிமன்றம் அந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து, ஜாமினை உறுதி செய்தது.

இதை எதிர்த்து மேகாலயா அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் உச்ச நீதிமன்றமும் ஜாமினுக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை ஜூலை.9ம் தேதி நடைபெற உள்ளது.