மம்தா 
இந்தியா

இடைத்தேர்தலில் மம்தா போட்டியில்லை.. வேட்பாளர்களை அறிவித்த திரிணாமுல் காங்கிரஸ் - அதிருப்தி பிரிவு என்ன சொல்கிறது?

இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல்களும் மேற்கு வங்க அரசியலில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.

மேற்கு வங்கத்தில் உள்ள நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை முன்னாள் முதல்வர் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

நந்திகிராம் தொகுதியில் சஞ்சிதா பிரதானையும், ரெஜிநகர் தொகுதியில் ரபியுல் ஆலம் சௌத்ரியையும் அக்கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

இரு தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அக்டோபர் 9-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல்களும் மேற்கு வங்க அரசியலில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.

மம்தா பானர்ஜி சட்டமன்ற தேர்தலில் சுவேந்து அதிகாரியிடம் பவானிப்பூர் தொகுதியில் தோற்றார். எனவே நந்திகிராம் இடைத்தேர்தலில் மம்தா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அத்தொகுதிக்கு சஞ்சிதா பிரதான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நந்திகிராம் - ரெஜிநகர்

முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தேர்தலில் பவானிபூர், நந்திகிராம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றார்.

அவர் பவானிபூர் தொகுதியைத் தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்ததால் நந்திகிராமில் இடைத்தேர்தல் நடக்கிறது.

ரெஜிநகர் மற்றும் நவதா ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற ஆம் ஜனதா உன்னயன் கட்சியின் நிறுவனர் ஹுமாயூன் கபீர், நவதா தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டதால் ரெஜிநகர் தொகுதி காலியானது.

அதிருப்தி பிரிவினர் நிலைப்பாடு

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 207 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 80 இடங்கள் மட்டுமே வென்றது. தோல்வியால் 80 இல் 50க்கும் மேற்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பிரிந்து ரிதர்ப்பா பானர்ஜி தலைமையில் தனி அணியாக செயல்படுகின்றனர். அவரிடமே பெரும்பான்மை உள்ளதால் ரிதர்ப்பாவை மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக சபாநாயகர் அங்கீகரித்தார்.

மம்தா தலைமையிலான பிரிவு தாங்களே கட்சி என உறுதியாக உள்ளது. கிளர்ச்சி அணி, மம்தாவே தங்கள் தலைவி என்றும் கட்சிக்குள் இருக்கும் ஒரு சிலரின் ஆதிக்கத்தை எதிர்ப்பவதாகவும் முன்னரே தெரிவித்திருந்தது. மேலும் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தினால் தாங்கள் வேட்பாளர்களை இடைத்தேர்தலில் நிறுத்த மாட்டோம் என கிளர்ச்சி அணி கூறியிருக்கிறது.

இடைத்தேர்தல்

மேற்கு வங்காளத்துடன் சேர்த்து தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களிலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள தட்டஞ்சாவடி தொகுதியிலும் ஒரே கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறும்.

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் போர்டோலோய் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அசாமின் நாகோன் தொகுதி காலியானது. எனவே நாகோன் மக்களவைத் தொகுதியிலும் தேர்தல் நடக்கிறது.

அனைத்துத் தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறும்.

SCROLL FOR NEXT