இந்தியா

மகாராஷ்டிராவில் பெரும் துயரம்: ஐபோன் கேட்டு பிடிவாதம் பிடித்த 19 வயது மகனால் மொத்த குடும்பமும் பரிதாபமாக பலி!

நொடிப் பொழுதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி முழுவதையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள சால்டா ஃபாடா பகுதியைச் சேர்ந்தவர் முரளிதர் சாந்த்குடே(48). ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவருக்கு குணால் (19) என்ற மகன் இருந்தார். வறுமையான சூழலிலும், குணால் தனது பெற்றோரிடம் புதிதாக ஐபோன் வாங்கித் தருமாறு கேட்டுத் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார்.

குடும்பத்தின் நிதி நிலைமை காரணமாகத் தந்தை போனை வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த குணால், நேற்று காலை 10 மணியளவில் அருகில் இருந்த சுமார் 400-500 அடி உயரமுள்ள கவ்டா மலைக்குச் சென்று தற்கொலை செய்வதாக மிரட்டினார்.

மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை பலி

தகவலறிந்த தீயணைப்புத் துறையினரும், வாளுஜ் எம்பிசி காவல்துறையினரும், கிராம மக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மலையின் கீழே பாதுகாப்பு வலைகளை அமைத்து குணாலைக் காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால், மீட்புக் குழுவினரைக் கண்ட குணால் மலையின் விளிம்பிலேயே தனது இடங்களை மாற்றிக் கொண்டே இருந்தார்.

சுமார் 3 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின், மதியம் 1 மணியளவில் தந்தை முரளிதர் மகனைச் சமாதானப்படுத்தி மீட்க அருகில் சென்றார். அப்போது குணால் மலையிலிருந்து குதிக்க, அவரைப் பிடிக்க முயன்ற தந்தை முரளிதரும் நிலைதடுமாறி மகனுடன் சேர்த்து மலையிலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

தாங்க முடியாத தாய் உயிரை மாய்த்துக் கொண்டார்

கண்முன்னே கணவனும் மகனும் 500 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து பலியான கோரக் காட்சியைக் கண்டு கதறிய தாய் சங்கீதா, கடுமையான மன உளைச்சலில் அதே இடத்தில் இருந்து மலையிலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். நொடிப் பொழுதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி முழுவதையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உடல்களைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.