கழுதைகளுக்கு குலாப் ஜாமூன்  
இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் மழை வேண்டி கழுதைகளுக்கு குலாப் ஜாமூன் ஊட்டி சிறப்பு வழிபாடு!

போதிய மழையின்றி வறட்சியான சூழல் நிலவுகிறது.

வழிபாடு

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பலவீனமடைந்துள்ளதால் தலைநகர் போபாலில் மழை வேண்டி கழுதைகளுக்கு குலாப் ஜாமுன் ஊட்டும் விசித்திரமான வழிபாடு கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மழைக் கடவுளான இந்திரனை மகிழ்வித்து, மாநிலத்தில் போதிய மழை பொழிய வைக்க போபாலில் கோலார் சாலைப் பகுதியில் நடந்த இந்த சடங்கில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். மேலும் மழை வேண்டி வழிபாடும் நடத்தப்பட்டது.

கழுதைகளுக்கு குலாப் ஜாமுன் ஊட்டிய விசித்திர சடங்கின் வீடியோ இணையத்தில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,

"பருவமழை தாமதமாகும் போதோ அல்லது போதிய மழை பொழியாமல் வறட்சி ஏற்படும் போதோ, எங்களது முன்னோர்கள் கடைப்பிடித்த ஒரு நீண்டகால பாரம்பரிய வழக்கத்தின்படியே இந்தச் சடங்கை நடத்தினோம்.

இந்து புராணங்களின்படி மழைக்கடவுளாகக் கருதப்படும் இந்திரனை குளிர வைக்கவும், அவரது கோபத்தைத் தணித்து நல்ல மழையைப் பெறவுமே இந்த பிரசாதம் கழுதைகளுக்கு வழங்கப்பட்டது" என்று தெரிவித்தனர்.

மழைப்பொழிவு

மாநிலத்தின் மொத்தமுள்ள மாவட்டங்களில் 35 மாவட்டங்களில் இதுவரை பெய்திருக்க வேண்டிய சராசரி மழையை விட மிகக் குறைவான மழையே பதிவாகியுள்ளது. போதிய மழையின்றி வறட்சியான சூழல் நிலவுகிறது.

போபால் நகரில் இந்த பருவமழைக் காலத்தில் பெய்ய வேண்டிய சராசரி அளவை விட 44 சதவீதம் கூடுதல் மழை பதிவாகியுள்ளது.

வறண்ட மாவட்டங்களிலும் இன்று முதல் பருவமழை மீண்டும் தீவிரமடைந்து பரவலாக நல்ல மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது