வருமானத்திற்கு அதிகமாக 560 சதவீதம் சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்ததையடுத்து ரூ.7.6 கோடி மதிப்பிலான சொத்துகள் மற்றும் 28 நிலப் பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், பச்மரியில் உள்ள சத்புரா புலிகள் காப்பகத்தின் உதவி இயக்குநராகப் பணியாற்றி வரும் சஞ்சீவ் குமார் சர்மா என்பவரது வீடு மற்றும் அலுவலகங்களில் மாநில லோக் ஆயுக்தா காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 7.6 கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளன.
சஞ்சீவ் குமார் சர்மா, அவரது மனைவி மற்றும் சிலர் இணைந்து தனது சட்டபூர்வமான வருமானத்தை விடப் பல மடங்கு அதிகமாகச் சொத்துகளைக் குவித்துள்ளதாக லோக் ஆயுக்தா அமைப்பிற்குப் புகார் வந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில், அவரது சொத்து மதிப்பு தெரிந்த வருமானத்தை விட 228 சதவீதம் அதிகமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அதிகாரிகள், நீதிமன்றத்திடம் சோதனை வாரண்ட் பெற்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
போபால் பிரிவைச் சேர்ந்த லோக் ஆயுக்தா தனிப்படையினர், பச்மரியில் உள்ள சர்மாவின் அரசு குடியிருப்பு, அவரது அலுவலகம் மற்றும் சிந்த்வாராவில் உள்ள அவரது சொந்த வீடு ஆகிய மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது, கணக்கில் வராத 26,36,800 ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சுமார் 3.5 கோடி ரூபாய் மதிப்பிலான 2.528 கிலோ தங்க நகைகளும், 2.94 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.656 கிலோ வெள்ளிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
சோதனையின் போது ஸ்கார்பியோ கார், மஹிந்திரா கே.யூ.வி கார், ராயல் என்ஃபீல்டு புல்லட் மற்றும் ஒரு ஸ்கூட்டர் என மொத்தம் 31.2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதவிர, வீட்டில் இருந்த சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடம்பர வீட்டு உபயோகப் பொருட்களும் கணக்கிடப்பட்டுள்ளன. மேலும், சர்மாவிற்கு தொடர்புடைய இரண்டு முக்கிய சொத்துகள் குறித்த விவரங்களும் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளன. அதில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான 'எக்கோடெல் ரிசார்ட்' மற்றும் 1 கோடி ரூபாய் மதிப்பிலான 'செரினிட்டி தி வில்லா' ஆகியவை அடங்கும். நிலப் பரிவர்த்தனைகள் தொடர்பான 28 முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதுவரை கண்டறியப்பட்டுள்ள சொத்துகளின் ஆரம்பகட்ட மதிப்பு சுமார் 7.6 கோடி ரூபாயாக இருக்கும் என லோக் ஆயுக்தா மதிப்பிட்டுள்ளது. இது சர்மாவின் வருமான ஆதாரங்களை விடத் தோராயமாக 560 சதவீதம் அதிகமாகும். கைப்பற்றப்பட்டுள்ள 28 நில ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்த பிறகும், ரிசார்ட் மற்றும் வில்லாவின் மதிப்பை அதிகாரப்பூர்வமாகக் கணக்கிட்ட பிறகும் மொத்த சொத்து மதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சஞ்சீவ் குமார் சர்மாவிற்குத் தொடர்புடைய வேறு சில இடங்களிலும் சோதனை நடத்த லோக் ஆயுக்தா திட்டமிட்டுள்ளதால், இந்த விவகாரம் மத்தியப் பிரதேச அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.