

சிக்கிம் மாநிலம் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்வதுடன், கடந்த 2017-ஆம் ஆண்டு இந்திய - சீனப் படைகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட டோக்லாம் பீடபூமிக்கு மிக அருகிலும் அமைந்துள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிம் வான்பரப்பிற்குள் சீன ராணுவ விமானம் ஒன்று அத்துமீறி நுழைந்து, சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் வரை வட்டமிட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்திய விமானப்படையின் தொடர்ச்சியான எச்சரிக்கைகளையும் மீறி அந்த விமானம் அப்பகுதியில் நீடித்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த 12-ஆம் தேதி காலை சுமார் 8 மணியளவில், சிக்கிம் வான்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் சீன ராணுவ விமானம் ஒன்று நுழைந்ததை இந்திய விமானப்படையின் ரேடார்கள் கண்டறிந்தன. தரையிலிருந்து சுமார் 25,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த அந்த விமானத்தை, உடனடியாக சீன எல்லைக்குள் திரும்பிச் செல்லுமாறு இந்திய விமானப்படை சார்பில் பலமுறை ரேடியோ எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
இருப்பினும், அந்த எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாத சீன விமானம், சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் வரை இந்திய வான்பரப்பிற்குள்ளேயே தொடர்ந்து வட்டமிட்டதாக அவுட்லுக் செய்தி நிறுவனத்தின் பிரத்யேக அறிக்கை தெரிவிக்கிறது. அந்த விமானம் எந்த வகையைச் சேர்ந்தது, அதன் துல்லியமான பயணப் பாதை என்ன மற்றும் அது எப்போது இந்திய வான்பரப்பை விட்டு வெளியேறியது போன்ற மேலதிக விவரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியவரவில்லை.
சீன விமானம் அத்துமீறியதாகக் கூறப்படும் இந்தப் பகுதி, இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் பாதுகாப்பிற்கு சவாலான 'சிலிகுரி வழித்தடத்தை' ஒட்டி அமைந்துள்ளது. 'சிக்கன்ஸ் நெக்' என அழைக்கப்படும் இந்த குறுகிய நிலப்பரப்புதான், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே தரைவழிப் பாதையாகும். மேலும், சிக்கிம் மாநிலம் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்வதுடன், கடந்த 2017-ஆம் ஆண்டு இந்திய - சீனப் படைகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட டோக்லாம் பீடபூமிக்கு மிக அருகிலும் அமைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் நடைபெறும் சிறிய அசைவுகள்கூட இந்தியப் பாதுகாப்புப் படைகளால் மிக உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன.
இந்தச் சம்பவம் குறித்து இந்திய விமானப்படையோ அல்லது பாதுகாப்பு அமைச்சகமோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்வித விளக்கத்தையும் அளிக்கவில்லை. இதற்கிடையே, இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சியான காங்கிரஸ், எல்லைப் பாதுகாப்பு குறித்து மத்திய அரசிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், சீனாவிடம் இந்தியா தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, தனியார் ஊடக மாநாடு ஒன்றில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சீனாவுடனான எல்லைப் பகுதி முன்பை விட இப்போது மிகவும் 'உயிர்ப்புடன்' இருப்பதாகவும், அங்கு தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான படைகளை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். 2020-ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சாலைகள், பாலங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் விமான ஓடுதளங்கள் அமைக்கும் பணிகளை இந்தியா தீவிரப்படுத்தி ராணுவக் கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.