இந்தியா

வீட்டு சமையல்காரர் மீது சரமாரி தாக்குதல்.. கிரிக்கெட் வீரர் சஷாங் சிங் மற்றும் அவரின் தந்தை மீது வழக்குப்பதிவு

தோமர் சமைத்த உணவின் தரம் குறித்து வீட்டினர் தொடர்ந்து குறை கூறி வந்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சஷாங் சிங் மற்றும் அவரின் தந்தை மீது வீட்டு சமையல்காரரை தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஆல்ரவுண்டர் சஷாங் சிங். இவரது தந்தை ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி சைலேஷ் சிங்.

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இவர்களின் பங்களா வீடு அமைந்துள்ளது.

ரேவா மாவட்டத்தை சேர்ந்த 31 வயதான விபேந்திர சிங் தோமர் என்ற நபர், போபாலில் உள்ள சஷாங் சிங்கின் வீட்டுக்கு சமையல் வேலைக்காக அண்மையில் வந்துள்ளார்.

கடந்த ஜூன் 25 அன்றுதான் தோமர் இந்த வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

சமையல்

வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே, தோமர் சமைத்த உணவின் தரம் குறித்து வீட்டினர் தொடர்ந்து குறை கூறி வந்துள்ளனர்.

தான் அவமானப்படுத்தப்படுவதாக உணர்ந்த தோமர் வேலையை ராஜினாமா செய்துவிட்டுத் தனது சொந்த ஊருக்குத் திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

சஷாங் சிங் மற்றும் அவரது தந்தை இருவரும் தோமரை ஆபாச சொற்களால் வசைபாடி, அவரது செல்போனை பறித்துள்ளனர்.

தாக்குதல்

அவர்கள் தன்னை தாக்கக்கூடும் என பயந்த தோமர், வீட்டில் உள்ள அறை ஒன்றுக்குள் சென்று உள்பக்கமாகப் பூட்டிக் கொண்டுள்ளார்.

சஷாங் சிங், அவரது தந்தை சைலேஷ் சிங் மற்றும் அவர்களது கார் ஓட்டுநர் மிஸ்ரா ஆகிய மூவரும் சேர்ந்து அந்த அறையின் கதவைப் உடைத்து, தோமரைத் தடியால் தாக்கி, பங்களாவை விட்டு வெளியேற்றி உள்ளனர்

பாதிக்கப்பட்ட தோமர் காயங்களுடன் ரதிபாட் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்த நிலையில், சஷாங் சிங், அவரது தந்தை மற்றும் ஓட்டுநர் ஆகிய மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனையில் தோமரின் முகம் மற்றும் உடலில் காயங்களுக்கான தழும்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.