இந்தியா

அது AI புகைப்படம்.. ம.பி படகு விபத்தில் பலியான தாய்-மகன் படம் உண்மையில்லை என மாவட்ட ஆட்சியர் விளக்கம்

விபத்தில் இரு தாயும் மகனும் அணைத்தபடி உயிரிழந்ததை பார்த்ததாக மீட்பு படையை சேர்ந்த வீரர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நர்மதா ஆற்றின் மீது பார்கி அணை அமைந்துள்ளது.

இங்கு மத்திய பிரதேச சுற்றுலா துறை சார்பில் இயக்கப்பட்ட படகுகள் இயக்கப்படுகின்றன.

கடந்த ஏப்ரல் 30-ந்தேதி இந்த அணைக்கு சென்று சுமார் 40 சுற்றுலாப் பயணிகள் படகில் பயணித்துள்ளனர்.

அப்போது பலத்த காற்று வீசியதில், படகு கவிழ்ந்தது. இதில், படகில் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட பலரும் நீரில் மூழ்கினர். அவர்களில் 18 பேர் பலத்த முயற்சிக்கு பின்னர் மீட்கப்பட்டனர். எனினும், இந்த விபத்தில் சிக்கி 10 பேர் பலியானார்கள்.

இந்த விபத்தில் பலியான தாய்-மகன் என்று இணையத்தில் ஒரு புகைப்படம் பரப்பப்பட்டு வந்தது. அந்த படத்தின் உயிர் காக்கும் கவசத்துடன் தாய் தனது மகனை அணைத்தபடி நீரில் சடலமாக மிதப்பது சித்தரிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் இரு தாயும் மகனும் அணைத்தபடி உயிரிழந்ததை பார்த்ததாக மீட்பு படையை சேர்ந்த வீரர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ஆனால் இணையத்தில் பரப்பப்பட்டு வரும் இந்த புகைப்படம் போலியானது என்று தெரியவந்துள்ளது.

ஜபல்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட பதிவில், பார்கி அணை விபத்துக்கும் இந்த புகைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவிக்கின்றது.

ஜபல்பூர் மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பதிவில், இந்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டு இருக்கும் அல்லது வேறு இடத்தில் எடுக்கப்பட்ட ஒன்றாக இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.