இந்தியா

உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல்: 403 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராகும் லோக் ஜனசக்தி கட்சி!

இளைஞர்களை ஈர்க்கும் வகையிலான 'யுத் போலே தோ' போன்ற பிரசாரங்கள் மூலமாகவும் களப்பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

உபி மாநிலத்தின் அனைத்து 403 தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிடத் தயாராக இருப்பதாக லோக் ஜனசக்தி கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் அறிவித்துள்ளார்.

வரவிருக்கும் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முறையான தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறாவிட்டால், உபி மாநிலத்தின் அனைத்து 403 தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிடத் தயாராக இருப்பதாக லோக் ஜனசக்தி கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் அறிவித்துள்ளார். உபி அரசியலில் தனது கட்சியின் செல்வாக்கை விரிவுபடுத்தும் நோக்கில் அவர் விடுத்துள்ள இந்த அதிரடி எச்சரிக்கை தேசிய அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

லோக் ஜனசக்தி கட்சியின் வியூகம்

பீகார் அரசியலில் தொடர்ந்து தனது பலத்தை நிரூபித்து வரும் சிராக் பாஸ்வான், தற்போது தனது தந்தை மறைந்த ராம் விலாஸ் பாஸ்வானின் தாக்கத்தையும் பாரம்பரியத்தையும் உபி மாநிலத்திலும் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளார். உபி மாநிலம் முழுவதும் உள்ள கட்சியின் அமைப்பு ரீதியான பலத்தை வலுப்படுத்தவும், இளைஞர்களை ஈர்க்கும் வகையிலான 'யுத் போலே தோ' போன்ற பிரசாரங்கள் மூலமாகவும் களப்பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். கூட்டணி உடன்பாடு எட்டப்படாத பட்சத்தில், கட்சித் தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவது குறித்துத் தீவிரமாக ஆலோசித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தாலும், உரிய மரியாதை மற்றும் தகுந்த தொகுதிகள் வழங்கப்படாவிட்டால் தனித்துப் போட்டியிடுவதாக மறைமுகச் செய்தியைச் சிராக் பாஸ்வான் இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். உபி மாநிலத்தில் உள்ள தலித் மற்றும் இளைஞர் வாக்குகளைக் குறிவைத்து அவர் முன்னெடுத்து வரும் இந்த நகர்வு, தேர்தல் நெருங்கும் வேளையில் ஆளுங்கட்சியான பாஜகவிற்குச் சிறிய அளவிலான அரசியல் அழுத்தத்தை உருவாக்கியுள்ளதுடன், உபி மாநிலக் தேர்தல் களத்தை மேலும் பரபரப்பானதாக மாற்றியுள்ளது.

SCROLL FOR NEXT