புளோரிடாவில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய டிரம்ப், மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றங்களுக்குப் பிறகு அமெரிக்காவின் சக்திவாய்ந்த போர்க்கப்பல்கள் கியூபா கடற்கரை வழியாக வரும்போது அங்கு நிறுத்தி வைக்கப்படும் என்றும், அங்குள்ள அரசை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ ஈடுபடுவார் என்றும் எச்சரித்தார்.
அமெரிக்க இடைத்தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கியூபா நாட்டை நோக்கிப் போர் கப்பல்களை அனுப்பப் போவதாக விடுத்திருக்கும் பகிரங்க மிரட்டல் சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் வல்லரசான அமெரிக்கா, தன் கண் அருகேயுள்ள சிறிய தீவான கியூபாவை இவ்வளவு தீவிரமாக எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
புளோரிடாவில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய டிரம்ப், மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றங்களுக்குப் பிறகு அமெரிக்காவின் சக்திவாய்ந்த போர்க்கப்பல்கள் கியூபா கடற்கரை வழியாக வரும்போது அங்கு நிறுத்தி வைக்கப்படும் என்றும், அங்குள்ள அரசை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ ஈடுபடுவார் என்றும் எச்சரித்தார். இதற்கேற்ப, கியூபா மக்கள் அமெரிக்காவின் மத்தியப் புலனாய்வு அமைப்பான சிஐஏ-வுடன் ரகசியமாக இணைந்து தங்களது நாட்டில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என மார்க்கோ ரூபியோ வெளிப்படையாகவே அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் பிரதான பூமிக்கு மிக அருகில் அமைந்துள்ள கியூபா, பல தசாப்தங்களாகவே வாஷிங்டனின் கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் கம்யூனிச கொள்கைகளைக் கடைப்பிடித்து வருகிறது. புவியியல் ரீதியாக அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும், அமெரிக்காவின் எதிரி நாடுகளுக்குப் புகலிடமாகவும் இந்தத் தீவு மாறக்கூடும் என்ற அச்சமே டிரம்பின் இந்த ஆக்ரோஷமான அணுகுமுறைக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. மேலும், லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்காவின் செல்வாக்கைக் கேள்விக்குள்ளாக்கும் சக்தியாகக் கியூபா விளங்குவதை வாஷிங்டன் விரும்பவில்லை.
கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான பொருளாதாரச் சரிவு, மின்வெட்டு மற்றும் உணவுப் பற்றாக்குறை ஆகியவற்றால் கியூபா தவித்து வருகிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, நாட்டின் மீது எண்ணெய் தடைகளை விதித்தும், பல்வேறு பொருளாதாரத் தண்டிப்புகளை அறிவித்தும் கியூபாவை முடக்க அமெரிக்கா தீவிரமாக முயன்று வருகிறது. கியூபாவை ஒரு 'தோல்வியடைந்த நாடு' என்று ஐக்கிய நாடுகள் சபையில் வர்ணித்த டிரம்ப், அங்குள்ள தற்போதைய ஆட்சியை அகற்றுவதே தனது நீண்டகால இலக்கு என்பதை வெளிப்படையாகவே பிரசாரங்களில் பேசிவருகிறார்.
அமெரிக்காவின் இந்த மிரட்டல்களுக்கும் ஆதிக்க வெறிக்கும் கியூபாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அச்சுறுத்தல்களைத் துளியும் பொருட்படுத்தப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அவர், தங்கள் நாட்டின் கடற்கரைகள் ஆக்கிரமிப்பு நோக்கத்துடன் வருபவர்களுக்கு மரணப் பள்ளமாகவே இருக்கும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக டிரம்ப் கியூபா விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்திருப்பது சர்வதேச அளவில் புதிய மோதல்களுக்கு வழிவகுத்துள்ளது.