திரிணாமுல் காங்கிரசை விட்டு வெளியேறிய 2 மாதத்தில் எம்.பி யூசுப் பதானுக்கு குஜராத் அரசு இலவசமாக நிலம் வழங்கியுள்ளது.
குஜராத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 7 ஆண்டுகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாடினார். அப்போது 2 முறை அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் மேற்கு வங்கத்தில் யூசுப் பதானுக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.
எனவேதான் வெளிமாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் யூசுப் பதானை 2025 மக்களவை தேர்தலில் மேற்கு வங்க மாநிலம் பஹராம்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் களமிறக்கி மம்தா பானர்ஜி வெற்றி பெற வைத்தார்.
ஆனால் இவ்வாண்டு மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பாஜவிடம் தோற்ற பின் அக்கட்சியில் இருந்து விலகி 20 கிளர்ச்சி எம்.பிக்களுடன் என்சிபிஐ என்ற பிராந்திய கட்சியில் இணைந்து பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவளித்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரியவராக இருந்த பதான் இவ்வாறு கட்சி தாவியது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் அவருக்கு நிலம் ஒன்று குஜராத் அரசால் பரிசாக வழங்கிப்பட்டுள்ளது.
இந்த பிளாட்டை கைப்பற்ற யூசுப் பதான் 14 ஆண்டுகளாக போராடிய நிலையில் மம்தா பானர்ஜியின் கட்சியை விட்டு வெளியேறிய 2 மாதத்திலேயே அதை இலவசமாக வழங்க குஜராத் பாஜக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
யூசுப் பதான் தனது சகோதரரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இர்பான் பதான் மற்றும் குடும்பத்தினருடன் குஜராத்மாநிலம் வதோதராவில் உள்ள தாண்டல்ஜா பகுதியில் வசித்து வருகிறார்.
இவரது பங்களாவையொட்டி வதோதரா மாநகராட்சிக்கு சொந்தமான 978 சதுர மீட்டர் நிலம் உள்ளது.
வீட்டின் அருகே காலியிடம் இருப்பது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக கூறி இந்த நிலத்தை பொது ஏலமின்றி 99 ஆண்டுகள் குத்தகைக்கு தனக்கு வழங்கும்படி யூசுப்பதான் கடந்த 2012ஆம் ஆண்டு வதோதரா மாநகராட்சியை அணுகினார். ஆனால் வதோதரா மாநகராட்சி கொடுக்க மறுத்தது.
இதனை எதிர்த்து யூசுப் பதான் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி நிலத்தை யூசுப் பதானுக்கு வழங்க குஜராத் பாஜக அரசு ஒப்புதல் வழங்கியது.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் இந்த நிலத்தை மாநகராட்சியின் நிலைக்குழு பொது ஏலம் விட முடிவெடுத்தது. மொத்த நிலத்தின் மதிப்பபு ரூ.20.5 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் அது கைவிடப்பட்ட நிலையில் தற்போது யூசுப் பதானுக்கு பாதி இடம் இலவசமாகவும், மீதமுள்ள இடம் 50 சதவீத தள்ளுபடி விலையிலும் வழங்கப்பட உள்ளது.
இதுதொடர்பான விவரங்கள் வதோதரா மாநகராட்சிக்கு ஆகஸ்ட் 29ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து யூசுப் பதான் தனது வழக்கை வாபஸ் பெற்றார்.
இது மம்தா பானர்ஜியை கைவிட்டு பாஜக பக்கம் பதான் சாய்ந்ததற்கு வழங்கப்பட்ட வெகுமதி என்றே விமர்சனங்கள் எழுந்துள்ளன.