இந்தியா

PF-இல் புதிய நடைமுறை அமலாகிறது... சந்தாதாரர்களுக்கு குட் நியூஸ்!

ஊழியர் அல்லது நிறுவனம் எந்த நேரத்திலும் கூடுதல் பங்களிப்பை குறைக்கவோ, நிறுத்தவோ முடியும்.

வருங்கால வைப்பு நிதியில் மாதம் ரூ.1,800-க்கு மேல் செலுத்துவது விருப்ப தேர்வாகும். தங்கள் கணக்கில் இருந்து சந்தாரர்கள் இனி 100 சதவீதம் வரை பணம் எடுக்கலாம். அதற்கான விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளன.

அடிப்படை சம்பளம்

வருங்கா கால வைப்பு நிதி அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள 8 கோடிக்கு ஊழியர்களுக்கு பலன் அளிக்கும் வகையில், புதிய விதிகள் நடைமுறைக்கு வர உள்ளன. இந்த புதிய விதிகளின்படி, மாதம் ரூ.15,000 வரை உள்ள ஊதிய வரம்பில் 12 சதவீதம் பி.எப். பங்களிப்பு கட்டாயமாக இருக்கும். அதாவது, ஊழியரும், நிறுவனமும் தலா மாதம் அதிகபட்சமாக ரூ.1,800 வீதம் கட்டாயமாக செலுத்த வேண்டும்.

இதற்கு மேல் செலுத்தப்படும் தொகை அனைத்தும் விருப்பப் பங்களிப்பாக கருதப்படும். இதனால், ஒருவரின் அடிப்படை சம்பளம் ரூ.1 லட்சமாக இருந்தாலும், கட்டாய பி.எப். பிடித்தம் ரூ.1,800 மட்டுமே இருக்கும். அதற்கு மேல் ஓய்வூதிய சேமிப்பை அதிகரிக்க விரும்பினால், கூடுதல் தொகையை விருப்ப அடிப்படையில் பி.எப். கணக்கில் செலுத்தலாம். அதாவது ஊழியர்கள் சட்டப்பூர்வ வரம்பை மீறி கூடுதல் பங்களிப்பை செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிறுவனங்களும் அந்த கூடுதல் தொகைக்கு இணையான பங்களிப்பை வழங்கலாம். ஆனால் அது கட்டாயம் அல்ல.

100 சதவீதம் வரை

மேலும், ஊழியர் அல்லது நிறுவனம் எந்த நேரத்திலும் இந்த கூடுதல் பங்களிப்பை குறைக்கவோ, நிறுத்தவோ முடியும். அதன் மூலம் உறுப்பினர்கள் தங்களின் ஓய்வூதிய சேமிப்பை தாங்களே திட்டமிட்டு அதிகரிக்க உதவும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அதே போல பி.எப். கணக்கிலிருந்து முன்பணமாக பணம் எடுக்கும் விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒருஆண்டுக்கு பணம் எடுக்கும் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதியான இருப்புத் தொகையில் 100 சதவீதம் வரை முன்பணமாக எடுத்துக்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதில் ஊழியர் மற்றும் நிறுவனம் செலுத்திய பங்களிப்பு தொகைகளும் அடங்கும். எனினும், உறுப்பினர்கள் தங்களது கணக்கில் உள்ள மொத்த பங்களிப்பில் குறைந்தபட்சம் 25 சதவீதத்தை இருப்பாக வைத்திருக்க வேண்டும்.