கேரளாவில் கால்பந்து விளையாட்டுக்கு என்று பெருமளவில் ரசிகர் பட்டாளம் உள்ளனர். இதன் காரணமாக நாட்டின் ‘கால்பந்து தொட்டில்’ என்ற பட்டத்தை கேரளா பெற்றுள்ளது.
கேரளாவில் உள்ள மலப்புரம், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் போன்ற நகரங்கள் கால்பந்து ரசிகர்களின் இருப்பிடமாக திகழ்கிறது.
மேலும் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி, மஞ்சப்படா மற்றும் கோகுலம் கேரளா எஃப்சி போன்ற அணிகள் உருவாக்கப்பட்டு கால்பந்து லீக் ஆட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதையடுத்து 2026 ஃபிஃபா உலகக் கோப்பையை எந்த வித உரிமக் கட்டணமுமின்றி இலவசமாக பொதுமக்களுக்கு திரையிட, கேரள அரசு ஒளிபரப்பு உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஒவ்வொரு ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் போதும், கேரளா ஒரு மாபெரும் திறந்தவெளி திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அப்போது அந்த பகுதியில் உள்ளூர் அமைப்புகள், புரொஜக்டர் திரைகளை அமைத்து கால்பந்து போட்டிகளை ஒளிபரப்பி வருகின்றனர்.
இந்தியாவில் 2026 ஃபிஃபா உலகக்கோப்பை ஒளிபரப்பு உரிமைகளை ஜீ என்டெர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் வைத்துள்ளது.
இந்நிலையில் இதன் ஒளிபரப்பு உரிமைகளை பிரத்தியேகமாக கேரளா மற்றும் மாஹே மைதானங்களில் பொதுமக்கள் பார்வையிட ‘ஈகிள்ஸ் எஃப்சி கேரளா அணிக்கு’ ZEE5 நிறுவனம் வழங்கியுள்ளது.
இதைத்தொடர்ந்து கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஜனீஷ் ஆகியோர், உரிமக் கட்டணத்தை முழுமையாக நீக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டு வருவதாக கூறினர்.