கேரளம் மாநிலத்தில் தெரு நாய்கள் தொல்லை நீண்ட காலமாக மிகப் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட மாவட்டம் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் தெருக்களில் திரியும் வெறி நாய் கடியால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு இதுவரை நூற்றுக்கணக்கானோர் வெறிநாய்க்கடிக்கு உள்ளாகி இருப்பது மட்டுமின்றி, சிலர் ரேபிஸ் நோய் தாக்கி பலியாகியும் உள்ளனர்.
தெரு நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், அவற்றின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றவும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும் தெருநாய்கள் தொல்லை என்பது கேரளத்தில் கட்டுப்படுத்த முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.
இந்தநிலையில் வெறி நாய்களை விரட்டும் ‘ஸ்மார்ட்’ கைக்கடிகாரத்தை கேரள கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். ஆலப்புழா மாவட்டம் செங்கன்னூர் பகுதியில் செயல்படும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறையின் இறுதியாண்டு மாணவர்கள் பிளெஸ்ஸன் மேத்யூ வில்சன், பின்சன், பிரவீன் குமார், சாவியோ ஜாய், ஸ்ரீராக்.
இவர்கள் தான் வெறி நாயை விரட்டியடிக்கும் ‘ஸ்மார்ட்’ கைக்கடிகாரத்தை கண்டுபிடித்து உள்ளனர். மாணவர்கள் உருவாக்கி யிருக்கும் அந்த ‘ஸ்மார்ட்’ கைக்கடிகாரம் உயர் அதிர் வெண் கொண்ட மீயொலி அலைகளை வெளியிடும்.
அதற்காக கைக்கடிகாரத்தில் பிரத்யே கமாக அமைக்கப் பட்டுள்ள பொத்தானை அழுத்தினால் ‘மீயொலி’ அலைகளை வெளிப்படுத்தும். அந்த அலைகள் ஆக்ரோஷமான வெறிநாய்களை அந்த இடத்திலிருந்து ஓடச் செய்து விடும்.
சாதாரணமாக தெருவில் செல்லும்போது திடீரென நாய்கள் வரும் பட்சத்தில், அவசரகால சூழ்நிலையிலும் இயக்கும் வகையில் இந்த ‘ஸ்மார்ட்’ கைக்கடிகாரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கைக்கடிகாரத்தில் அதிர்வு எச்சரிக்கை, எல்.இ.டி. அறிகுறி மற்றும் நிகழ்நேர கடிகார காட்சி வசதிகளும் உள்ளன.
வெறிநாய்களை விரட்டியடிக்கும் இந்த கைக்கடி காரத்திற்கு அதனை உருவாக்கிய மாணவர்கள், தங்களது துறை தலைவரான டாக்டர் டின்டு மேரி ஜான் வழிகாட்டுதலின்படி இந்திய காப்புரிமையும் பெற்றுள்ளனர். இதன் மூலம் தங்களது புதிய படைப்பை முழுமையடைய செய்துள்ளனர்.
வெறிநாய்களை விரட்டும் தங்களின் புதிய கண்டுபிடிப்பு குறித்து இந்த ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை உருவாக்கிய மாணவர்கள் கூறியதாவது:-
கேரளத்தில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. இதனால் தெருக்களில் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என யாரும் நிம்மதியாக நடந்து செல்ல முடிவ தில்லை. இதற்கு தீர்வு காணும் வகையில் நாங்கள் ‘ஸ்மார்ட்’ கைக்கடிகாரம் கண்டுபிடித்துள்ளோம்.
அவசரகால சூழ்நிலையில் இயக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள அந்த ‘ஸ்மார்ட்’ கைக்கடிகாரத்தை அனைவரும் பயன்படுத்தலாம். கைக்கடிகாரத்தில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தினால் உயர் அதிர் வெண் கொண்ட ‘மீயொலி’ அலைகள் வெளியாகும்.
அவை ஆக்ரோஷமான நாய்களை வெகுதூரத்திற்கு விரட்டி அடித்து விடும். இதனால் நாம் தெரு நாய்கள் தாக்குதல மற்றும் தொல்லை யில் இருந்து எளிதாக தப்பிக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாணவர்கள் கண்டு பிடித்துள்ள வெறிநாய்களை விரட்டியடிக்கும் இந்த புதிய ‘ஸ்மார்ட்’ கைக்கடிகாரத்தில் எதிர்காலத்தில் மேலும் பல புதிய அம்சங்கள் இடம் பெற உள்ளன.
அதாவது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி நாயை தானாகவே அடையாளம் காணுதல், குரைக்கும் ஒலியை பகுப்பாய்வு செய்து தானாக இயங்குதல், ஜி.பி.எஸ். இருப்பிட பகிர்வு போன்ற பல அம்சங்களை இந்த ‘ஸ்மார்ட்’ கைக்கடிகாரத்தில் இணைக்க அதனை கண்டுபிடித்த மாணவர்கள் முயன்று வருகின்றனர்.