ஓடீசா மாநிலத்தில் உருவான குறைந்த காற்றழுத்தம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்வதால், கேரள மாநிலத்தில் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த மழையின் போது பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வறண்ட வானிலை மற்றும் ஆங்காங்கே பெய்யும் மழைப் பொழிவு வருகிற 10-ந் தேதி வரை நீடிக்கும் என அறிவித்துள்ள வானிலை மையம், பல்வேறு மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. வரும் நாட்களில் வானிலை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுவதால், நாளை (திங்கட்கிழமை) கண்ணூர் மற்றும் காசர் கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
7-ந் தேதி (செவ்வாய்க்க கிழமை) கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வருகிற 10-ந் தேதி வரை கேரளாவின் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்ற நிலையில், 7-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், கேரளாவின் வடக்கு கடற்கரையின் சில பகுதிகளில் இன்று இரவு 11.30 மணி வரை 2.9 மீட்டர் முதல் 3.5 மீட்டர் வரையிலான உயரமான அலைகள் மற்றும் கடல் ஊடுருவல் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய தேசிய கடல்சார் தகவல் மையம் எச்சரித்துள்ளது. மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு, மீனவர்கள் 7-ந் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.