தேவன் 
இந்தியா

பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகர்.. காரணம் இதுதான்

தேவன் ராஜினாமாவை கோவில் நிகழ்வு மேடையில் அறிவித்தது குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

திரைப்பட நடிகரும் கேரளா பாஜக மாநில துணைத் தலைவருமான தேவன், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு மற்றும் துணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.

அறிவிப்பு

ஆலப்புழாவில் உள்ள கணச்சுகுளங்கரை தேவி கோவில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேவன் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகத்தின் பொதுச்செயலாளர் வெள்ளாப்பள்ளி நடேசன் மற்றும் பாஜக தலைவர் பி. ராதாகிருஷ்ணன் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய தேவன் தனது விலகலை பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குருவின் கொள்கைகள், தத்துவங்கள் மற்றும் திட்டங்களை உள்ளடக்கிய அரசியலையே தான் விரும்புவதாகத் தேவன் குறிப்பிட்டார்.

கடந்த 5 ஆண்டுகளாக கேரளா பாஜகவில் பணியாற்றிய பிறகு, அந்த லட்சியங்களை அடைய முடியவில்லை என்றும், தன் பாதை வேறு என்பதை உணர்ந்ததால் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறினார்.

அரசியல் பின்னணி

'கேரளா பீப்பிள்ஸ் பார்ட்டி' என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வந்த தேவன் , 2020இல் அதனை 'நவ கேரளா பீப்பிள்ஸ் பார்ட்டி' எனப் பெயர் மாற்றினார்.

2021இல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பிறகு தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு மாநிலத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

2024 மக்களவை தேர்தலில் திருவனந்தபுரத்தில் ராஜீவ் சந்திரசேகர் பெற்ற கணிசமான வாக்குகளுக்கும் வெற்றிக்கும் தனது உழைப்பு முக்கியப் பங்காற்றியதாகத் தேவன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக அதிருப்தி

தேவன் ராஜினாமாவை கோவில் நிகழ்வு மேடையில் அறிவித்தது குறித்து பாஜக தலைவர் பி. ராதாகிருஷ்ணன் மேனன் அதிருப்தி தெரிவித்தார்.

2047க்குள் இந்தியாவை உலகின் முதன்மை நாடாக மாற்றப் பாஜக எடுக்கும் முயற்சிகளில் இருந்து விலக தேவன் எடுத்த முடிவுக்கான காரணம் தெரியவில்லை என்றும், ஆனால் இத்தகைய முடிவை அறிவிப்பதற்கு இந்த மேடை உகந்தது அல்ல என்றும் அவர் கூறினார்.