மத்தியப் பிரதேசத்தில் கென் மற்றும் பெத்வா ஆகிய இரண்டு நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு எதிராக பழங்குடியினர் கடந்த 15 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களை இன்று போலீசார் வலுக்கட்டாயமாக கலைத்தனர்.
இந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி கடந்த 11 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த சமூக ஆர்வலர் அமித் பட்நாகரை கைது செய்த போலீசார், போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக பேருந்துகளில் ஏற்றி அவர்களது சொந்த கிராமங்களுக்கு திருப்பி அனுப்பினர்.
இந்தியாவின் முதலாவது நதி நீர் இணைப்புத் திட்டம் கென்-பெத்வா நதி நீர் இணைப்பு திட்டம்.
மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள வறட்சிமிக்க புந்தேல்கண்ட் பகுதிக்கு குடிநீர் மற்றும் பாசன வசதியை வழங்குவதற்காக கென் நதியில் உள்ள உபரி நீரை பெத்வா நதிக்கு திருப்பி விடுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்திற்காகப் பன்னா புலி காப்பகம் உட்படப் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் நீரில் மூழ்கி அழியும் அபாயம் உள்ளதாக கருதப்படுகிறது.
இந்த திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பழங்குடியின மக்களுக்கான மறுவாழ்வு நிதி வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பழங்குடியினரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த திட்டம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள முறைகேடுகளுக்கு எதிராக கடந்த ஜூலை 3ஆம் தேதி முதல் சத்தர்பூர் மாவட்டத்தின் பரானா நதிக்கரையில் பழங்குடியினப் பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
போராட்டக்காரர்கள், நீரில் இறங்கிப் போராடுவது, பாடையில் படுத்துப் போராடுவது மற்றும் தூக்குக்கயிற்றை அணிந்துகொண்டு போராடுவது என பல்வேறு வகையில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வந்தனர்.
போராட்டக் குழுவின் முக்கிய தலைவரான திவ்யா அகிர்வார்,
"இந்த நதி இணைப்புத் திட்டத்தில் சுமார் 400 கோடி ரூபாய் அளவிற்குப் ஊழல் நடந்துள்ளது. இது குறித்த ஆதாரங்களுடன் நாங்கள் ஊடகங்களைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டிருந்தோம்.
ஆனால், அதற்குச் சற்று முன்பாக விடியற்காலை 5 மணிக்கே மிகப்பெரிய போலீஸ் படை திரண்டு வந்து, அமித் பட்நாகர் உட்பட எங்களையெல்லாம் வலுக்கட்டாயமாகக் கைது செய்தது" என சாடியுள்ளார்.
இந்த போராட்டத்தில் கடந்த 11 நாட்களாக தொடர் உண்ணாவிரதத்தில் இருந்ததால் அமித் பட்நாகரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அதன் காரணமாகவே அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார் என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆதித்யா பட்லே கூறுகையில், "கட்டுமானத்தில் உள்ள ஒரு பாலத்திற்கு அடியிலும் நதியிலும் இறங்கிப் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது.
நதியில் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் ஏற்பட்ட பாதுகாப்பு அபாயங்கள் காரணமாகவே போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்" என்று தெரிவித்தார்.
டெல்லியில் மத்திய அரசின் கீழ் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகிறது.
இதில் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் நேற்று டெல்லி போலீசாரால் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டார்.
மேலும் நாளை பாராளுமன்றம் நோக்கி பேரணி நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பாஜக ஆளும் மத்திய பிரதேசத்திலும் பழங்குடியினரின் போராட்டம் ஒடுக்கப்பட்டுள்ளது விமர்சனத்தை குவித்து வருகிறது.