

நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்ட முறைகேடுகளுக்கு பொறுப்பான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என அபிஜித் தீப்கே தலைமையிலான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மற்றும் பிற இயக்கங்களை சேர்ந்த இளைஞர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் இணைந்து கடந்த 20 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த லடாக் செயல்பாட்டார்கள் மற்றும் கல்வியாளர் சோனம் வாங்சுக் நேற்று டெல்லி காவல்துறையால் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
9 கிலோவுக்கு மேல் குறைந்து அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தபோதும் மத்திய அரசு தரப்பில் ஆழ்ந்த மௌனம் மட்டுமே பதிலாக இருந்து வருகிறது.
இந்த சூழலில் நேற்று அவர் வலுக்கட்டாயமாக தூக்கிச்செல்லப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் 1984ம் ஆண்டு இந்திரா காந்தியின் அரசை எதிர்த்து சோனம் வாங்சுக் உடைய தந்தை சோனம் வாங்யால் லடாக் உரிமைகளுக்காக உண்ணாவிரதம் இருந்த வரலாற்று பின்னணி கவனம் பெற்று வருகிறது.
1965ல் தனது 23வது வயதிலேயே எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டு, அன்றைய காலகட்டத்தில் மிக இளம் வயதில் எவரெஸ்ட் ஏறிய நபர் என்ற உலக சாதனையைப் படைத்தவர்.
பின்னர் லடாக்கின் முக்கிய அரசியல் தலைவராக உருவெடுத்து, ஜம்மு காஷ்மீர் சட்டமேலவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் பணியாற்றினார்.
1984 இல் லடாக் மக்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்கக் கோரி சோனம் வாங்யால் உண்ணாவிரதம் இருந்தார். 5 நாட்களாக தொடர்ந்த அவரின் உண்ணாவிரத போராட்டம் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் கவனத்தை ஈர்த்தது.
இந்திரா காந்தி நேரடியாக லடாக்கின் லே பகுதிக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். லடாக் மக்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்து அவரின் உண்ணாவிரதத்தை முடிக்கச் செய்தார்.
ஐந்தாண்டுகளுக்கு பிறகு 1989ல் லடாக் மக்களின் நீண்டகாலக் கோரிக்கை சட்ட வடிவம் பெற்றது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 342வது பிரிவின் கீழ் லடாக்கில் வசிக்கும் பால்டி, பேடா, போட், ப்ரோக்பா, சாங்பா, கர்ரா, மோன் மற்றும் புரிக்பா ஆகிய 8 சமூகங்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்கப்பட்டது.
இது லடாக் வரலாற்றின் மிகப்பெரிய அரசியல் வெற்றியாகக் கருதப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்து வந்தது லடாக். 2019இல் ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை ரத்து செய்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கை தனித்தனி யூனியன் பிரதேசமாக்கியது மத்திய பாஜக அரசு. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டுமே தங்களுக்கு மாநில அந்தஸ்து வேண்டி போராடி வருகிறது.
கடந்த ஆண்டு லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் 6வது அட்டவணையில் சேர்ப்பு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோரி 35 நாட்கள் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் அவரின் உண்ணாவிரதம் இளைஞர்களை தூண்டிவிட்டதாக கூறி அவரை கைது செய்து பாஜக அரசு திகார் சிறையில் அடைத்தது.
அவரை பாகிஸ்தான் ஏஜென்ட் என துணை ஆளுநரின் ஆளுநரின் கீழ் செயல்படும் லடாக் போலீசார் குற்றம்சாட்டினார். மாதக்கணக்கில் அவர் சிறையில் இருந்த நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்று அவரை விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புக்கொண்டது. கடந்த மார்ச்சில் அவர் விடுதலை ஆனார்.
இந்த சூழலில் மாணவர்கள் எதிர்காலத்தை முன்னிருத்தி அவர் உண்ணாவிரதம் தொடங்கினார்.
ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அவரின் கோரிக்கைகளை காதில் வாங்கவோ குறைந்தபட்சம் பேச்சுவார்த்தை நடத்தவோ முன்வரவில்லை.