

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை சஃப்தர்ஜங் மருத்துவமனையிலிருந்து, தனியார் மருத்துவமனைக்கு மாற்றக்கோரிய அவரது மனைவியின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இப்போதைக்கு இந்த உத்தரவு தேவையற்றது என தெரிவித்த நீதிமன்றம், மூன்று நாட்களுக்குகள் சோனம் உடல்நிலை குறித்த புதிய அறிக்கையை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை ஜூலை.24ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே ஆங்மோ தொடர்ந்த இந்த வழக்கில், ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், வாங்சுக்கிற்கென தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளதையும், குடும்பத்தினர் அனைவரும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அவர் அருகில் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டியது.
“இதைக் கருத்தில் கொண்டு, இந்தக் கட்டத்தில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை” என தெரிவித்தது.
அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சையின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை எனவும், தனது கணவரின் உடல்நிலை மோசமடைவதற்கு முன்பு அவரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
பலமுறை கோரிக்கை விடுத்தபோதிலும், மருத்துவமனை அதிகாரிகள் வாங்சுக்கை டிஸ்சார்ஜ் செய்யவோ அல்லது அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்றவோ அனுமதி மறுத்துவிட்டதாக அந்த மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.
வாங்சுக் அனுமதிக்கப்பட்டுள்ள தளத்தில் 30 போலீசாரும், மருத்துவமனை முழுவதும் 100கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளதால் குடும்பத்தினரால் சுதந்திரமாக வாங்சுக்கை அணுக முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
“இது மருத்துவ சிகிச்சை அல்ல. இது சட்டவிரோதக் காவலில் வைத்தல்” எனவும் கூறியுள்ளார். மேலும், தங்கள் அன்புக்குரியவர் எங்கு சிகிச்சை பெற வேண்டும் என்பதைத் தீர்மானிக்க, எந்தவொரு குடும்பமும் ஒரு அரசுடன் போராட வேண்டிய நிலை யாருக்கும் வரக்கூடாது எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் வாங்சுக்கின் முழுமையான ஒப்புதல் இல்லாமலோ, அவரால் ஒப்புதல் அளிக்க இயலாத பட்சத்தில், அவரது மனைவியின் ஒப்புதல் இல்லாமலோ அதிகாரிகள் எந்தவொரு சிகிச்சையையும் அளிக்கக் கூடாது என உத்தரவிடவும் மனுக் கோரியது.
நீட் தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என கடந்த மாதம் முதல் கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வாங்சுக், ஜூன்.28 முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
உண்ணாவிரதம் 15 நாட்களை தாண்டிய நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனையடுத்து வாங்சுக்கை காப்பற்றக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க அரசுக்கு உத்தரவிட்டது.
அதனைத்தொடர்ந்து வாங்சுக்கை சோதித்த மருத்துவர்கள் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், 9 கிலோவுக்கு அதிகமான இடையை அவர் இழந்ததாகவும் அறிக்கை வெளியிட்டனர். இந்த உண்ணாவிரதம் தொடர்ந்தால் வாங்சுக் இறக்க நேரிடலாம் எனவும் வியாழன்க்கிழமை அறிக்கை வெளியிட்டனர்.
இந்நிலையில் நேற்று மத்திய அரசின் சார்பில் வாங்சுக்கை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர் போலீசார். இச்சூழலில் அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றக்கோரி அவரது மனைவி வழக்குத் தொடர்ந்தார்.
இதனிடையே கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே உண்ணாவிரதப் போராட்டத்தை கையிலெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.