இந்தியா

வேத மந்திரங்கள் முழங்க மூடப்பட்ட கேதார்நாத் - யமுனோத்ரி கோயில் நடை: 28 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

கோயில்களின் நடை அடைக்கப்படுவதற்கான சிறப்பு பூஜைகள் மற்றும் சடங்குகள் அதிகாலை 4 மணியளவில் தொடங்கின.

இந்த ஆண்டுக்கான யாத்திரைக் காலத்தில் மட்டும் கேதார்நாத்திற்கு 19.13 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களும், யமுனோத்ரிக்கு 8.84 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களான கேதார்நாத் மற்றும் யமுனோத்ரி கோயில்களின் நடை குளிர்கால பருவத்திற்காக மூடப்பட்டுள்ளது. வேத மந்திரங்கள் முழங்க மற்றும் பாரம்பரிய வழிபாட்டு முறைப்படி இன்று இந்தத் திருத்தலங்களின் கதவுகள் மூடப்பட்டன. இதில் கேதார்நாத் கோயில் காலை 8.30 மணிக்கும், யமுனோத்ரி கோயில் காலை 10.28 மணிக்கும் மூடப்பட்டன. இந்த ஆண்டுக்கான யாத்திரைக் காலத்தில் மட்டும் கேதார்நாத்திற்கு 19.13 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களும், யமுனோத்ரிக்கு 8.84 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். இதன் மூலம் இந்த ஆண்டு மொத்தம் 27.97 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இப்பகுதிகளுக்கு வருகை தந்துள்ளனர்.

ஆன்மீகப் பயணம்

கோயில்களின் நடை அடைக்கப்படுவதற்கான சிறப்பு பூஜைகள் மற்றும் சடங்குகள் அதிகாலை 4 மணியளவில் தொடங்கின. அனைத்து பாரம்பரிய வழிபாடுகளும் முழுமையாக நிறைவேற்றப்பட்ட பின்னர் கோயிலின் கதவுகள் திறக்கப்பட்டு குறிப்பிட்ட நல்ல நேரத்தில் மூடப்பட்டன. கோயில் நடை அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மூலவர் கேதார்நாத் பெருமானின் திருவுருவம் தாங்கிய உற்சவர் ஊர்வலப் பல்லக்கு கோயில் வளாகத்தைச் சுற்றி வந்து, குளிர்கால இருப்பிடமான உகிமத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் கோயிலை நோக்கிப் புறப்பட்டது.

இந்த உற்சவப் பல்லக்கு புதன்கிழமை ராம்பூரில் இரவு தங்கிய பிறகு, நவம்பர் 12ஆம் தேதி குப்தகாசியை அடைந்து, நவம்பர் 13ஆம் தேதி ஓம்காரேஷ்வர் கோயிலைச் சென்றடையும். குளிர்காலத்தின் அடுத்த ஆறு மாத காலத்திற்கு பக்தர்கள் ஓம்காரேஷ்வர் கோயிலிலேயே கேதாரநாத் பெருமானை தரிசித்து வழிபடலாம்.

இதேபோல், சனிதேவ் மகாராஜ் முன்னிலையில் யமுனா தேவியின் உற்சவப் பல்லக்கும் பாரம்பரிய நாட்டுப்புற வாத்தியங்கள் மற்றும் சடங்குகளுடன் யமுனோத்ரியில் இருந்து தனது குளிர்கால இருப்பிடமான கார்சாலிக்கு புறப்பட்டது. வழியிலும் கிராம மக்களும் பக்தர்களும் பல்லக்கிற்கு மலர்களைத் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆறு மாத யாத்திரைக் காலத்தில் யமுனோத்ரி கோயில் அறக்கட்டளைக்கு உண்டியல்கள் மற்றும் ரசீது புத்தகங்கள் மூலம் ரூ.90 லட்சத்திற்கு மேல் நன்கொடைகள் கிடைத்துள்ளன. கோயில் நடை அடைக்கப்படுவதற்கு முந்தைய நாளான செவ்வாய்க்கிழமை அன்று உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், ரொக்கமாக ரூ.10 லட்சத்து 42 ஆயிரமும், ரசீது புத்தகங்கள் மூலம் தோராயமாக ரூ.6 லட்சமும் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT