கோவிலில் திருடு போன செருப்பு: 10 நிமிடத்தில் டெலிவரி செய்த 'குயிக் காமர்ஸ்' செயலி!

கோவில் வாசலில் திருடுபோன செருப்புக்கு பதிலாக பத்து நிமிடத்தில் குயிக் காமர்ஸில் புதிய செருப்பு வந்தது - சந்தீப் மால் நெகிழ்ச்சி பதிவு
Quick Commerce
Published on: 
Summary

உத்தரப் பிரதேச மாநிலம் விருந்தாவனில் உள்ள பிரசித்தி பெற்ற பாங்கே பிஹாரி கோவிலுக்குச் சென்ற தொழிலதிபர் ஒருவரின் தந்தையின் செருப்பு திருடு போன நிலையில், அடுத்த 10 நிமிடங்களில் 'குயிக் காமர்ஸ்' செயலி மூலம் புதிய செருப்பை ஆர்டர் செய்து பெற்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேகமாக வளர்ந்து வரும் நவீன இந்தியாவும், வறுமையின் பிடியில் இருக்கும் பழைய இந்தியாவும் ஒரே புள்ளியில் சந்திக்கும் தருணம் இது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கோவில் வாசலில் நடந்த சுவாரசிய சம்பவம்

தொழிலதிபர் சந்தீப் மால் என்பவர் சமீபத்தில் தனது தந்தையுடன் விருந்தாவனில் உள்ள பாங்கே பிஹாரி கோவிலுக்குச் சென்றுள்ளார். தரிசனம் முடித்து வெளியே வந்தபோது, கோவில் வாசலில் விடப்பட்டிருந்த அவரது தந்தையின் செருப்பு திருடு போயிருந்தது தெரியவந்தது.

உடனடியாகச் சுதாரித்துக்கொண்ட சந்தீப் மால், நவீன தொழில்நுட்பத்தின் உதவியை நாடினார். தனது செல்போனில் இருந்த 'குயிக் காமர்ஸ்' (விரைவு விநியோக) செயலி மூலம் புதிய செருப்பு ஒன்றை ஆர்டர் செய்தார்.

ஆச்சரியப்படும் விதமாக, ஆர்டர் செய்த வெறும் 10 நிமிடங்களில் டெலிவரி ஊழியர் கோவில் வாசலுக்கே வந்து புதிய செருப்பை வழங்கியுள்ளார்.

சந்தீப் மால் எக்ஸ் பதிவு

இது குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சந்தீப் மால், "பாங்கே பிஹாரி கோவிலுக்கு வெளியே அப்பாவின் செருப்பு திருடு போனது.

அடுத்த 10 நிமிடங்களில் கோவில் வாசலிலேயே குயிக் காமர்ஸ் மூலம் புதிய செருப்பு டெலிவரி செய்யப்பட்டது. உலகின் வேறு எந்த மூலையிலும் இப்படியொரு சேவையைக் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது" எனப் பாராட்டியுள்ளார்.

'இருவேறு இந்தியா' குறித்த இணைய விவாதம்

இந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, இந்தியாவின் இருவேறு முகங்கள் குறித்து இணையத்தில் தீவிர விவாதம் தொடங்கியுள்ளது.

2011 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் இந்தியா சுமார் 49.6 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ள போதிலும், வழிபாட்டுத் தலங்களில் செருப்பு திருடு போகும் பழைய வழக்கம் இன்றும் தொடர்கிறது.

அதேசமயம், பல பில்லியன் டாலர் மதிப்புள்ள 'குயிக் காமர்ஸ்' துறையில் உலகிற்கே முன்னோடியாக இந்தியா உருவெடுத்து, ஏழை எளிய மக்களுக்குக் கௌரவமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறது.

நெட்டிசன்களின் கருத்துகள்

"இருவேறு இந்தியாக்கள் ஒரே புள்ளியில் மோதிக் கொள்கின்றன" என ஒரு பயனரும், "இந்தியா என்பது ஒரு முரண்பாடுகளின் தொகுப்பு; அதை அப்படித்தான் புரிந்து கொள்ள முடியும்" என மற்றொருவரும் பதிவிட்டுள்ளனர்.

மழையில் சிக்கியபோது 10 நிமிடங்களில் ரெயின்கோட் பெற்றதையும், பார்க்கிங்கில் நின்றபடியே 5 நிமிடங்களில் பைக் லாக் ஆர்டர் செய்து பெற்றதையும் பலரும் பகிர்ந்து வருகின்றனர். "தேவைப்பட்ட ஒருவருக்கு அந்தச் செருப்பு கிடைத்துள்ளது; அதே சமயம் அது புதிய பொருளாதார வாய்ப்பையும் உருவாக்கியுள்ளது" என மற்றொரு பயனர் நேர்மறையாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

X