கர்நாடக மாநில மந்திரி சபை விரிவாக்கத்தில் இடம் கிடைக்காததால், அதிருப்தி அடைந்த யஷ்வந்தராய கௌடா பாட்டீல் என்ற எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கர்நாடக மாநில முதல்வராக டி.கே. சிவக்குமார் பொறுப்பேற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இன்று அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. இதில் புதிதாக 20 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
இந்த நிலையில் அமைச்சரவை பட்டியலில் இடம் இல்லாத குறித்தும், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது குறித்தும் யஷ்வந்தராயகௌடா பாட்டீல் கூறியதாவது:-
இன்று காலை வரை அமைச்சரவைக்கான பட்டியலில் தனது பெயர் இருந்தது. தனக்கு அது குறித்த தகவல் கூட வந்திருந்தது. ஆனால் கட்சி வெளியிட்ட இறுதிப் பட்டியலில் தனது பெயர் இடம்பெறவில்லை.
கட்சிக்குள் நடக்கும் நிகழ்வுகளை நான் கவனித்து வருகிறேன். இறுதியில், இன்றைய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, நமது தலைமை அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறிவிட்டது. எனவே, வேறு வழியின்றி நான் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துவிட்டேன்.
இது என் மனசாட்சிக்கு ஏற்புடையதல்ல. விஜயபுரா மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் விசுவாசத்திற்கும் நேர்மைக்கும் மதிப்பில்லை என்ற சூழலே நிலவுகிறது. எனக்கு வேறு வழியில்லை. எனது ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளுடன் பேசி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பேன்.
2023 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே எனக்கு அமைச்சர் பதவி தருவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அரசு அமைக்கப்பட்டபோது, இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும் அவர்கள் அந்த வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறிவிட்டனர். எனக்கு வேறு வழியில்லை. நான் கட்சியிலிருந்து விலகவில்லை, ஆனால் என்னை ராஜினாமா செய்யத் தூண்டும் சூழலை அவர்களே உருவாக்கிவிட்டனர்.
நான் எட்டுத் தேர்தல்களைச் சந்தித்த ஒரு முதிர்ச்சியான அரசியல்வாதி. நான் எடுத்த முடிவுகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்குவதில்லை. இது எனது தொகுதி வாக்காளர்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை.
இவ்வாறு யஷ்வந்தராயகௌடா வி. பாட்டீல் தெரிவித்தார்.
யஷ்வந்தராயகௌடா வி. பாட்டீல் தனது ராஜினாமா கடிதத்தை பெங்களூருவில் உள்ள விதான சௌதாவில் சட்டமன்ற துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானியிடம் சமர்ப்பித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.