மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவின் குடும்பம் உஜ்ஜைன் நகரில் 45 கோடி ரூபாய் மதிப்பில் நிலங்களை வாங்கிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் முறைகேடு இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
இந்நிலையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குடும்பம் ரூ.100 கோடி மதிப்புள்ள அரசு நிலங்களை வளைத்துப்போட்ட்டுள்ளதாக பாஜக பதில் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.
மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சித்தார்த்த விஹார் என்ற தனியார் அறக்கட்டளைக்கு கர்நாடகாவில் ரூ.100 கோடி மதிப்புள்ள முக்கிய அரசு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தெரிவித்துள்ளார்.
நேற்று டெல்லி பாஜக தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மல்லிகார்ஜுன் கார்கே, அவரது மகன் மற்றும் கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே, கார்கேயின் மருமகன் மற்றும் மனைவி ஆகியோர் சித்தார்த்த விஹார் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் ஆவர்.
இந்தக் குடும்பம் முழுவதும் ஒன்றுசேர்ந்து, தங்களது அரசியல் செல்வாக்கையும் அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தி, கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏழைகளின் நிலங்களைக் கொள்ளையடித்துள்ளது
2024ல் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த பின்னர், கர்நாடக தொழிற்பேட்டை மேம்பாட்டு வாரியம், சித்தார்த்த விஹார் அறக்கட்டளைக்கு 5 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு பெரிய நிலத்தை ஒதுக்கியிருக்கிறது.
தொழில்துறை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படவிருந்த இந்த நிலம், கார்கேயின் தனியார் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது எப்படி?. அதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய்.
மேலும் கலபுர்கியில் உள்ள அரசுக்குச் சொந்தமான 19 ஏக்கர் நிலம் ஒரே இரவில் கார்கே குடும்பத்தின் தனியார் அறக்கட்டளை சொத்தாக மாறியுள்ளது.
ராகுல் காந்தியும் ராபர்ட் வத்ராவும் நாட்டில் நிலங்களைக் கொள்ளையடித்ததைப் போலவே, மல்லிகார்ஜுன் கார்கே இப்போது கர்நாடகாவில் சித்தார்த்த விஹார் அறக்கட்டளை மூலம் அதே பாணியைத் தொடர்கிறார்.
சித்தார்த்த விஹார் அறக்கட்டளையால் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக நிலம் கையகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான கூடுதல் ஆவணங்களும் தகவல்களும் விரைவில் வெளியிடப்படும்" என்று கூறினார்.
இதற்கு எக்ஸில் பதிலடி கொடுத்துள்ள மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே,
"மக்கள் அயோத்தி ராமர் கோயில் குறித்து கணக்கு கேட்கிறார்கள், ஆனால் பாஜகவோ கலபுர்கியில் உள்ள புத்த விகாரம் குறித்து கேட்டு ஆர்எஸ்எஸ்-ஐ திருப்திப்படுத்த இரவும் பகலும் உழைத்து வருகிறது" என பதிவிட்டுள்ளார்.