இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணியை மேற்கொள்ள முடிவு செய்தது. முதன்முதலாக பீகாரில் மாநிலத்தில் இந்த SIR பணியை மேற்கொண்டது. அதன்பின் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 2-வது கட்டமாக அமல்படுத்தியது.
தற்போது மூன்றாவது கட்டமாக கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி SIR பணிக்கான விண்ணப்பம் விநியோகம் செய்யும் தொடங்கியது. ஜூலை 29-ந்தேதி வரை SIR பணி நடைபெற இருக்கிறது.
அதன்பிறகு தகுதியான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, சந்தேகத்திற்குரிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் பெயர் விடுபட்டவர்கள் தங்களுடைய ஆவணங்களை சமர்ப்பித்து பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த விண்ணப்பம் BLO-க்களால் வீடு வீடாக சென்று மக்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டும். ஆனால், மொத்தமாக ஒரு குறிப்பிட நபர்களிடம் கொடுத்து அனுப்புவதாகவும், வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்படவில்லை என்றும் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் அந்த கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான ஹெ.டி. குமாரசாமி குற்றம்சாட்டினார். மேலும், மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்று வருவதாகவும் குற்றம்சாட்டின்னார்.
இந்த நிலையில் கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அன்புக்குமார், BLO-க்களுக்கு உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளார். அதில் SIR விண்ணப்பங்களை வீடு வீடாக சென்று வழங்க வேண்டும். இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடடுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்புப் படிவங்களை நிரப்புவதில் சிரமம் உள்ள வாக்காளர்கள், உதவி பெறுவதற்காக வாக்காளர் உதவி மையங்களுக்கு செல்லும் வசதி உள்ளது; மேலும், இந்த வசதி குறித்த தகவல்கள் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நடைபெற்ற SIR பணியின்போது லட்சக்கணக்கான வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டன. குறிப்பாக மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்கள் வாக்குகள் மிகப்பெரிய அளவில் நிக்கப்பட்டதாக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தது.