இந்தியா

14,000 அடி உயரத்தில் யோகா தினத்தை கொண்டாடிய ITBP ஹிம்வீர்ஸ்!

பாங்கோங் த்சோ ஏரிக்கரையில் யோகாசனம் செய்த ராணுவத்தினர்!

12-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கிழக்கு லடாக்கில் சுமார் 14,000 அடி உயரத்தில் இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படை வீரர்கள் இன்று யோகா பயிற்சி செய்தனர்.

நாட்டின் மிகவும் சவாலான நிலப்பரப்பில் தங்களின் உடல் மற்றும் மன வலிமையை நிரூபிக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.

லடாக் பகுதியில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 14,270 அடி உயரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற உப்பு நீர் ஏரியான பாங்கோங் த்சோ கரையில், ITBP ஹிம்வீர்ஸ் யோகா செய்தனர்.

இமயமலைச் சூழல் மற்றும் கடுமையான வானிலைக்கு மத்தியில் இந்த யோகா தினத்தை கொண்டாடினர்.

இதுகுறித்து ITBP தனது எக்ஸ் பக்கத்தில், "14,000 அடி உயரத்தில் உடல், மனம் மற்றும் ஆன்மாவை பலப்படுத்துகிறோம். உடற்தகுதி மற்றும் மன உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் 'ஹிம்வீரர்கள்' யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்" எனத் தெரிவித்துள்ளது.

'ஹிம்வீரர்கள்' என்று அழைக்கப்படும் ITBP வீரர்கள், பனி சூழ்ந்த மலைப் பகுதிகள் மற்றும் பனிப்பாறைகள் போன்ற உலகின் மிகக் கடுமையான தட்பவெப்ப நிலைகளில் இந்திய-சீன எல்லையைக் காத்து வருகின்றனர்.

இந்த கடுமையான சூழலில் மன அழுத்தத்தைக் குறைக்கவும், கவனத்தை மேம்படுத்தவும் யோகா அவர்களுக்கு முக்கியப் பங்கற்றுகிறது.

இதற்கு முன்னதாக, ITBP வீரர்கள் பனிப்பாறைப் பகுதிகளில் 18,000 அடிக்கும் அதிகமான உயரத்திலுள்ள எல்லைச் சாவடிகளில் யோகா செய்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.