இந்திய ராணுவத்திற்கான செயற்கைக்கோள் அடிப்படையிலான சேவைகளை மேம்படுத்துவதற்காகவும், பாதுகாப்புத் தகவல் தொடர்பு அமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கிலும் இந்தியா மற்றொரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, டெல்லியிலுள்ள தலைமையக ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படை மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கீழ் ஆமதாபாத்தில் செயல்படும் விண்வெளிப் பயன்பாட்டு மையம் (எஸ்.ஏ.சி.) ஆகியவை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (எம்.ஓ.யு.) தயாரித்தது.
அதில், ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படையின் துணைத் தலைவர் ஏர் மார்ஷல் சங்கர் சுப்ரமணியன், விண்வெளிப் பயன்பாட்டு மையத்தின் (இஸ்ரோ) இயக்குனர் நிமேஷ் எம். தேசாய் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். தேசியப் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் திறனுக்காக விண்வெளித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இந்தியாவின் அதிகரித்து வரும் கவனத்தை இந்த ஒப்பந்தம் நிரூபிக்கிறது.
தற்போதுள்ள செயற்கைக்கோள் அடிப்படையிலான தொலைத் தொடர்பு முனைகளைப் பராமரித்தல், ஆயுதப் படைகளுக்கான புதிய தகவல் தொடர்பு முனைகளை உருவாக்குதல், பாதுகாப்பான மற்றும் நம்பகமான தகவல் தொடர்பு அமைப்புகளை வலுப்படுத்துதல், தொலை மருத்துவ சேவைகளை மேம்படுத்துவது போன்றவை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம், இந்திய ஆயுதப்படைகள், குறிப்பாக தொலைதூர மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில், தடையற்ற தகவல் தொடர்பைப் பராமரிக்க உதவும். நவீன போர் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. அத்துடன், தற்போதுள்ள உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். தகவல் தொடர்பு நம்பகத்தன்மை மேம்படும். தற்சார்பை ஊக்குவிக்கிறது. உள்நாட்டு இஸ்ரோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, வெளிநாட்டு அமைப்புகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.