இந்தியா

கப்பல் மீது ஈரான் தாக்குதல்: மாயமான இந்திய மாலுமி உயிரிழப்பு

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஐக்கிய அரபு எமிரேட்சின் 2 கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார்.

மத்திய கிழக்கில் ஈரான் -அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் வெடித்து உள்ளதால் பதற்றம் அதிகரித்து உள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியில் தாங்கள் அறிவித்துள்ள பாதையில் செல்லாமல், வேறு பாதையில் பயணிக்கும் வர்த்தக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

கடந்த 12-ந்தேதி ஓமன் கடற்பகுதியில் எம்.வி.ஜி.எப்.எஸ் கேலக்சி என்ற சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கப்பலின் இயந்திர அறையில் தீப்பிடித்து எரிந்தது. அந்தக் கப்பலில் 11 இந்தியர்கள் உள்பட 24 மாலுமிகள் இருந்தனர். தகவல் அறிந்ததும் ஓமன் கடற்படை விரைந்து சென்று 23 மாலுமிகளை மீட்டது.

தாக்குதல் நடந்தபோது இயந்திர அறைக்கு அருகில் பணியாற்றிய இந்திய மாலுமியான புனேவை சேர்ந்த ஹேராம்ப் கர்மர்கர் மாயமாகி இருந்தார். அவரை தேடும் பணி நடந்து வந்தது.

இந்த நிலையில் ஹேராம்ப் கர்மர்கர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் பலியாகி உள்ளதாக தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். என்ஜினீயரான ஹேராம்ப் கர்மர்கர் கடைசியாக 12-ந்தேதி அதிகாலை 2.49 மணிக்கு தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாகக் கடந்து விட்டதாக தெரிவித்திருந்தார். ஆனால் அதன் பின் நடந்த தாக்குதலில் சிக்கி பலியாகி உள்ளார்.

இதற்கிடையே நேற்று ஹோர்முஸ் ஜலசந்தியில் ஐக்கிய அரபு எமிரேட்சின் 2 கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். அவர் பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ரோஹன் குமார் (வயது 31) என்பது தெரியவந்தது. அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான நடைமுறைகளை தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.