

ஹார்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் பலியானார்.
இந்தத் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமீரகக் கப்பல்கள் தங்களது எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தியதே இத்தாக்குதலுக்குக் காரணம் என்று ஈரான் பாதுகாப்புப் படை விளக்கமளித்துள்ளது.
ஓமன் நாட்டின் கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த 'மொம்பாசா' மற்றும் 'அல் பாஹியா' ஆகிய இரண்டு அமீரக எண்ணெய் சூப்பர் டாங்கர் கப்பல்கள் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை குரூஸ் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. 'மொம்பாசா' கப்பலில் பணியாற்றி வந்த இந்திய மாலுமி ஒருவர் இந்த கொடூர தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தார்.
6 இந்தியர்கள் மற்றும் 2 உக்ரைன் நாட்டினர் உட்பட மொத்தம் 8 மாலுமிகள் காயமடைந்துள்ளனர். இவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏவுகணை வீச்சால் இரு கப்பல்களிலும் ஏற்பட்ட தீ விபத்து, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தற்பொழுது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் குறித்து விளக்கமளித்துள்ள ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, தவறு கப்பல் ஊழியர்கள் பக்கமே இருப்பதாகக் கூறியுள்ளது:
விதிமீறலில் ஈடுபட்ட அந்த இரு சூப்பர் டாங்கர் கப்பல்களும் தங்களது திசைகாட்டி மற்றும் கடல்சார் வழிசெலுத்தல் அமைப்புகளை வேண்டுமென்றே அணைத்துவிட்டன. ஆபத்தான கண்ணிவெடிகள் நிறைந்த கடல் பகுதியில் பயணிக்க முயன்ற அவற்றுக்கு எங்களது படைகள் தொடர்ந்து எச்சரிக்கைகளையும், அறிவுறுத்தல்களையும் வழங்கின.
ஆனால், அவர்கள் அதை முழுமையாகப் புறக்கணித்ததாலேயே கப்பல்கள் இலக்கு வைக்கப்பட்டு முடக்கப்பட்டன. மேலும், அமெரிக்காவின் தூண்டுதலின் பெயரிலேயே இந்தக் கப்பல்கள் சட்டவிரோதப் பாதையைப் பயன்படுத்தியதாகவும், இந்த பதற்றத்திற்கு அமெரிக்காவே முழுப் பொறுப்பு என்றும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தத் தாக்குதலை "வெளிப்படையான அராஜகத் தாக்குதல்" எனக் கடுமையாகக் கண்டித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், இதற்கு தகுந்த முறையில் பதிலடி கொடுக்கும் உரிமை தங்களுக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான கடல்சார் முற்றுகையை மீண்டும் அமல்படுத்துவதாக அறிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பை அமெரிக்காவே ஏற்கும் என்றும், அந்தப் பாதையைக் கடக்கும் கப்பல்களிடம் இருந்து 20 சதவீத பாதுகாப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்கப் படைகள் தொடர்ந்து மூன்றாவது இரவாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன என தெரிவிக்கிறது.
நடப்பு 2026 பிப்ரவரி முதல் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் தீவிர மோதல் போக்கு, தற்போதைய இந்த கப்பல் தாக்குதல் மற்றும் அமெரிக்காவின் கடல் முற்றுகை காரணமாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழ்நிலை, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாட்டையும், விலை உயர்வையும் ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.