டீசலை விட எல்.என்.ஜி எரிபொருளின் விலை குறைவு என்பதால், ரெயில்வே துறைக்கு எரிபொருள் செலவு கணிசமாக குறையும்.
இந்திய ரெயில்வே வரலாற்றில் புதிய மாற்றமாக, நாட்டின் முதல் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் ரெயில் சேவையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரெயில் நிலையத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் ரெயில்வே உயர் அதிகாரிகள் இந்த விழாவில் பங்கேற்றனர்.
இந்த புதிய ரெயிலில் 'இருமுனை எரிபொருள்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தேவைக்கேற்ப எல்.என்.ஜி மற்றும் டீசல் ஆகிய இரண்டிலுமே என்ஜினை இயக்க முடியும். இதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் டீசலின் பயன்பாட்டை சுமார் 40 சதவீதம் வரை குறைத்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நச்சு வாயுக்களின் உமிழ்வை பெருமளவில் கட்டுப்படுத்துகிறது.
டீசலை விட எல்.என்.ஜி எரிபொருளின் விலை குறைவு என்பதால், ரெயில்வே துறைக்கு எரிபொருள் செலவு கணிசமாக குறையும். இந்த புதிய எல்.என்.ஜி ரெயில் இயக்கத்தின் மூலம் இந்திய ரெயில்வேக்கு ஆண்டிற்குச் சுமார் 23.9 லட்சம் ரூபாய் வரை நிதி சேமிப்பு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், என்ஜினின் வேகம் அல்லது இழுவை திறனில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இது திறம்பட செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்.என்.ஜி ரெயில் சேவையைத் தொடங்கி வைத்ததுடன், சபர்மதி கோட்டத்தில் சுமார் 1,472 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய ரெயில்வே உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களையும் அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் வைத்தார். கடந்த சில ஆண்டுகளில் இந்திய ரெயில்வே அமைப்பில் 99.6 சதவீத பாதைகள் மின்மயமாக்கப்பட்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகவும், சுற்றுச்சூழல் வழியிலான நவீன மாற்றங்களில் இந்தியா முதன்மை பெற்று வருவதாகவும் அவர் விழாவில் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.