அமெரிக்க அரசாங்கத்தின் ஆய்வறிக்கையின்படி, உலகின் பிற நாடுகளை விட இந்தியாவில் தான் விசா காத்திருப்பு காலம் மிக மோசமாக உள்ளது.
அமெரிக்காவிற்கு பயணம் செய்ய விரும்புபவர்களுக்கான விசா நேர்காணல் காத்திருப்பு காலம் முன்னெப்பபோதும் இல்லாத வகையில் மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் இந்திய விண்ணப்பதாரர்கள் பெருமளவில் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர் என அமெரிக்க அரசு தணிக்கை அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்க விசா பெறுவதற்கான நேர்காணல் நேரம் ஒதுக்குவதில் பெரும் தாமதம் நிலவி வருகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பாக, அதாவது 2019-ஆம் நிதியாண்டில் இந்தியர்களுக்கு விசா நேர்காணலுக்கான சராசரி காத்திருப்பு காலம் வெறும் 42 நாட்களாக மட்டுமே இருந்தது. ஆனால், தற்போதைய நிலவரப்படி அது 346 நாட்களாக (கிட்டத்தட்ட ஒரு வருடம்) பன்மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கானோர் அமெரிக்க விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் நிலையில், அதைச் செயல்படுத்தும் அதிகாரிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து பெறப்பட்ட புலம்பெயர் அல்லாத விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை சுமார் 14.55 லட்சத்தைக் (14,55,255) கடந்துள்ளது. இந்த 14.5 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்களைக் கையாள இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகங்களில் வெறும் 68 அதிகாரிகள் மட்டுமே பணியில் உள்ளனர். இதன் காரணமாக, ஒவ்வொரு அமெரிக்கத் தூதரக அதிகாரியும் சராசரியாக 21,401 விசா விண்ணப்பங்களை கையாள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அரசாங்கத்தின் ஆய்வறிக்கையின்படி, உலகின் பிற நாடுகளை விட இந்தியாவில் தான் விசா காத்திருப்பு காலம் மிக மோசமாக உள்ளது.
சீனா: 12 லட்சம் விண்ணப்பங்களைச் செயல்படுத்த 119 அதிகாரிகள் உள்ளனர்; ஒரு அதிகாரிக்கான பணிச்சுமை 10,135 விண்ணப்பங்கள். சராசரி காத்திருப்பு காலம் 34 நாட்கள் மட்டுமே.
பிரேசில்: 11.4 லட்சம் விண்ணப்பங்களைக் கையாள 87 அதிகாரிகள் உள்ளனர். சராசரி காத்திருப்பு காலம் 32 நாட்கள்.
மெக்சிகோ:124 அதிகாரிகள் உள்ளனர்; சராசரி காத்திருப்பு காலம் 283 நாட்கள். சீனா, பிரேசில் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்திய தூதரக அதிகாரிகளுக்கு இருமடங்கு பணிச்சுமை இருப்பதுடன், காத்திருப்பு காலமும் மிக அதிகமாக உள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சுற்றுலா, உறவினர்களைச் சந்தித்தல் மற்றும் குறுகிய கால வணிகக் காரணங்களுக்காக வழங்கப்படும் பி1/பி2 விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்களே இதனால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில், மாணவர் விசாக்கள் (F1) மற்றும் பணி விசாக்களுக்கான (H-1B) நேர்காணல் ஸ்லாட்டுகள் ஒப்பீட்டளவில் சற்று குறைந்த காத்திருப்பு காலத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.