மாணவி பாலியல் வன்கொடுமை செய்தி வதந்தியா?.. பஞ்சாப் LPU பல்கலை கலவரத்தின் பின்னணி

ரெட்டிட்டில் ஒரு செய்தி வந்ததையடுத்து அந்த வதந்தி வேகமாகப் பரவியது.
பலகலை கலவரம்
பலகலை கலவரம்
Published on: 
Summary

பஞ்சாபின் லவ்லி பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பரவிய செய்தி வதந்தி என பல்கலைக்கழக டீன் தெரிவித்துள்ளார்.

பஞ்சாபின் பக்வாராவில் லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழக (LPU) வளாகத்தில் வெளியாள் ஒருவர் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் பரவிய தகவலை அடுத்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

கடந்த வார இறுதியில் போராட்டம் வன்முறையாக மாறி பல்கலகழக வளாகம் சூறையாடப்பட்டது. மேலும் அருகில் இருந்த தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்கள் மறியல் செய்து போலீஸ் வாகனங்களை தீயிட்டு எரித்தனர். நிலைமை மோசமானதால் 10 நாட்களுக்கு அனைத்து வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டன.

மாணவர்களுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. இதனிடையே பல்கலைக்கழகத்தில் எந்த மாணவியும் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்றும் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்றும் பல்கலைக்கழக தரப்பு தெரிவித்துள்ளது.

இது முற்றிலும் வதந்திதான் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் போலீசாரும் இதுவரை சம்பவத்திற்கான ஆதாரம் எதையும் கண்டுபிடிக்கவில்லை என கூறப்படுகிறது.

வதந்தி

இதுகுறித்து பல்கலைக்கழக டீன் டாக்டர் சௌரப் லக்கன்பால் கூறுகையில், "கடந்த 48 மணி நேரத்தில் பதிவான இந்தச் சம்பவம் அனைத்தும், விசாரணையின் போது, ​​ஒரு வதந்திப் பரவல் எனத் தெரியவந்துள்ளது.

ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக மாணவர்களுக்கு ரெட்டிட்டில் ஒரு செய்தி வந்ததையடுத்து அந்த வதந்தி வேகமாகப் பரவியது.

பல்கலைக்கழக அதிகாரிகள், நிர்வாகம் மற்றும் காவல்துறை ஆகிய நாங்கள் அனைவரும் இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருகிறோம்," என்று அவர் கூறினார்.

மேலும், "சம்பவம் தொடர்பாக ஏதேனும் பெயர், இடம் அல்லது இருப்பிடம் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் அல்லது எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க வேண்டும் என்று நாங்கள் மாணவர்களிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தோம்.

ஆனால், எந்த மாணவராலும் அத்தகைய தகவலை வழங்க முடியவில்லை. பின்னர் அது வெறும் வதந்திதான் என்பது உறுதி செய்யப்பட்டது.

முகமூடி நபர்கள்

மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததோடு, பல்கலைக்கழக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் விரும்பினர். நாங்கள் அவர்களுடன் பேசுவதற்காக அங்கு இருந்தோம்.

திடீரென்று, பிரதான வாயில் வழியாக, வெளியாட்கள் என நாங்கள் நம்பும் சிலர் உள்ளே நுழைந்தனர். அவர்கள் முகமூடிகளை அணிந்திருந்தனர், கைகளில் கம்பிகளை ஏந்தியிருந்தனர். அவர்களே பல்கலைக்கழகச் சொத்துக்களை சேதப்படுத்தத் தொடங்கினர்" என்று கூறினார்.

காவல்துறையின் தலையீட்டிற்குப் பிறகு நிலைமை இறுதியில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகளை சரிபார்க்கும் நோக்கில், நிர்வாகம் போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதாகவும், பல கோரிக்கைகளை நிறைவேற்றியதாகவும் கூறினார்.

நடவடிக்கை

சிசிடிவி காட்சிகளில் கம்பிகள் மற்றும் தடிகளுடன் காணப்பட்ட முகமூடி அணிந்த நபர்களின் அடையாளம் குறித்துக் கேட்டதற்கு, காவல்துறை ஏற்கனவே சிலரைக் கைது செய்துள்ளதாகவும், அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் டாக்டர் லக்கன்பால் தெரிவித்தார்.

அரசியல் உள்நோக்கம்

எல்.பி.யு நிறுவனரும் வேந்தருமான அசோக் குமார் மிட்டல் ஒரு பாஜக எம்.பி. என்பதால், இந்தக் கலவரத்திற்கு அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் என்று சில அரசியல் கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த டாக்டர் லக்கன்பால், தாம் தனிப்பட்ட முறையில் எந்த அரசியல் தலையீட்டையும் காணவில்லை என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com