மாணவி பாலியல் வன்கொடுமை?.. பஞ்சாப் பல்கலையில் வன்முறை - 10 நாட்களுக்கு வகுப்புகள் ரத்து

2,000க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
lpu protest
lpu protest
Published on: 
Summary

பஞ்சாபின் லவ்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் வன்முறையை தொடர்ந்து 10 நாட்களுக்கு வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன.

பஞ்சாபின் பக்வாராவில் லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழக (LPU) வளாகத்தில் வெளியாள் ஒருவர் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவலை அடுத்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

நேற்று பல்கலைக்கழக மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக வளாகத்தில் சொத்துக்களைச் சேதப்படுத்தியதுடன், தேசிய நெடுஞ்சாலை 44ஐயும் மறித்தனர்.

பின்னர், மாணவர்கள் காவல்துறையினருடன் மோதியதாலும், வாகனங்களைச் சேதப்படுத்தித் தீ வைத்ததாலும், பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசியதாலும் போராட்டங்கள் வன்முறையாக மாறின.

வைரலான காணொளிகளில், வளாகத்தில் சேதமடைந்த சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் ஒரு ஏடிஎம் மையம் ஆகியவை காணப்பட்டன.

வகுப்புகள் ரத்து

இதில் பல காவல்துறையினர் காயமடைந்தனர். பல்கலைக்கழகம் இன்று (செப்டம்பர் 28) முதல் 10 நாட்களுக்கு வகுப்புகளை ரத்து செய்துள்ளது. பருவத் தேர்வுகளையும் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைத்துள்ளது.

வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

மாணவர்களின் உண்மையான குறைகள் நிவர்த்தி செய்யப்படும் எனத் துணைவேந்தர் சந்து உறுதியளித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் இடையே நடைபெற்ற பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் எந்த முடிவும் எட்டப்படாமல் முடிந்தன.

பாஜக மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருக்கும் எல்.பி.யு நிறுவனரும் வேந்தருமான அசோக் மிட்டல், போராட்டத் தளத்திற்கு வருகை தந்து, தங்களின் குறைகள் தீர்க்கப்படும் என்று உறுதியளிக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், போராட்டத்தில் பங்கேற்றதற்காக மாணவர்கள் பழிவாங்கப்படக்கூடாது என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

காவல்துறை குவிப்பு

வன்முறை அதிகரித்ததை அடுத்து இரவு முழுவதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2,000க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும் விடுதிகளில் கலவரம் நடந்ததாக வந்த செய்திகள் வதந்திகளே என்றும், அனைத்து விடுதிகளும் சோதிக்கப்பட்டுவிட்டன என்றும் ஜலந்தர் காவல் ஆணையர் சதிந்தர் சிங் தெரிவித்தார்.

நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டதாகவும், தேசிய நெடுஞ்சாலை 44ல் போக்குவரத்து விரைவில் சீரமைக்கப்படும் என்றும் ஜலந்தர் சரக டிஐஜி நவீன் சிங்லா தெரிவித்தார்.

நடவடிக்கை

லவ்லி பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட அமைதியின்மைக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்யுமாறு காவல்துறை தலைமை இயக்குநர் கௌரவ் யாதவிற்கும் பகவந்த் மான் உத்தரவிட்டார்.

இதனிடையே மாணவர்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்பதே பல்கலைக்கழகத்தின் வாதமாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com