இந்தியா

வன்முறைச் செயல்களில் ஈடுபடாத இந்தியர்கள்: பியூஷ் கோயல் பாராட்டு

சமூக அமைதிக்கு முக்கியத்துவம் அளிப்பதே வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு பெரும் வரவேற்பும் மரியாதையும் கிடைக்கக் காரணம்.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் சட்டம்-ஒழுங்கை மதித்து, தங்களின் குடும்பத்தினருடன் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழ்ந்து வருவதாக பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இரண்டு நாள் அரசு முறை பயணமாகச் சென்றுள்ள மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், அங்குள்ள இந்திய சமூகத்தினரிடையே சிறப்புரையாற்றினார். ஐரோப்பிய நாடுகளில் சமீபகாலமாக பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக வெடித்துள்ள போராட்டங்கள் மற்றும் சில இடங்களில் அவை வன்முறையாக மாறுவது குறித்து அவர் மறைமுகமாகப் பேசினார்.

ஐரோப்பா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் தற்போதைய சூழலில், இந்திய வம்சாவளியினர் எப்போதுமே அமைதியான வழியைக் கடைப்பிடிப்பவர்கள் என்றும், பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கும் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் சட்டம்-ஒழுங்கை மதித்து, தங்களின் குடும்பத்தினருடன் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழ்ந்து வருவதாக பியூஷ் கோயல் குறிப்பிட்டார். இந்திய மக்கள் எங்கு சென்றாலும் வன்முறையில் ஈடுபடாமல், குடும்ப நலனுக்கும் சமூக அமைதிக்கும் முக்கியத்துவம் அளிப்பதே வெளிநாடுகளில் அவர்களுக்குப் பெரும் வரவேற்பும் மரியாதையும் கிடைக்கக் காரணம் என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT