இந்திய கடலோர காவல்படை தனது நான்காவது ஆதம்யா வகையை சேர்ந்த ‘ஐசிஜிஎஸ் அக்ஷய்’ கப்பலை இன்று பயன்பாட்டிற்கு கொண்டுவந்தது. மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டங்களின் கீழ் இந்த உள்நாட்டு கப்பல் கட்டப்பட்டுள்ளது.
கோவா மாநிலம் வாஸ்கோவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்ற விழாவில் இது முறைப்படி பணியில் சேர்க்கப்பட்டது.
இந்த வகை ரோந்து கப்பல் 52 மீட்டர் நீளமும், 320 டன் மொத்த எடையும் கொண்டவை. மேலும் 3,000 கிலோவாட் டீசல் என்ஜின் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் உள்ள ஒவ்வொரு கப்பலும் ஆறு அதிகாரிகள் மற்றும் 35 மாலுமிகளைக் கொண்ட குழுவால் இயக்கப்படுகிறது.
இது மனவளப் பாதுகாப்பு, பொருளாதார மண்டலக் கண்காணிப்பு, கடலோர ரோந்து, கடத்தல் தடுப்பு, கடற்கொள்ளைத் தடுப்பு, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வகைக் கப்பல்களில் உள்ள ஆயுத அமைப்புகளில், ஒரு 30மிமீ CRN 91 கடற்படைத் துப்பாக்கியும், இரண்டு 12.7மிமீ நிலைப்படுத்தப்பட்ட தொலைவுக் கட்டுப்பாட்டு இயந்திரத் துப்பாக்கிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த ரோந்து கப்பலுக்கு கமாண்டண்ட் தீபக் செளபே தலைமை தாங்குவார் என்றும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.