இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
டெல்லியில் ஆங்காங்கே மழை பெய்துவருவதால் வெப்பம் சற்று குறைந்துள்ளது. டெல்லியின் என்சிஆர் பகுதிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேகமூட்டமான வானமும், மிதமான மழை பொழிவும் பலத்த காற்றும் வீசும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மும்பை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் சர்ச்கேட் ரயில் நிலையம் அருகே பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்துள்ளது.
இந்நிலையில் மும்பைக்கு ரெட் எச்சரிக்கையும் தானே மற்றும் ராய்கட் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுளள்து.
அடுத்த 24 மணி நேரத்தில் மும்பை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கன முதல் மிகக் கனமான மழை பெய்யும் என்றும், ஆங்காங்கே பலத்த காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்நிலையில் நேற்று பெய்த தொடர் மழையின் காரணமாக, பல தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியது. இதனால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இத்துடன், மும்பையின் புறநகர் ரெயில் சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டது. வெள்ளம் சூழ்ந்த சாலைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாகப் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகினறனர்.