கடந்த 2014-ஆம் ஆண்டில் இந்தியாவில் வெறும் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரெயில் சேவைகள் பயன்பாட்டில் இருந்தன.
இந்தியாவின் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் பொது போக்குவரத்துத் துறை மிக வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. குறிப்பாக, மெட்ரோ ரெயில் திட்டங்கள் விரிவாக்கப்பட்டு வரும் வேகமானது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச அளவில் மிகப்பெரிய மெட்ரோ ரெயில் நெட்வொர்க்கைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா விரைவில் இரண்டாம் இடத்திற்கு முன்னேற உள்ளது.
தற்போது சர்வதேச அளவில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன. இருப்பினும், அமெரிக்காவை விட மிக குறைந்த இடைவெளியிலேயே இந்தியா பின் தங்கியிருப்பதாலும், நாடு முழுவதும் பெருமளவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாலும், விரைவில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியா இரண்டாம் இடத்தை உறுதியாகக் கைப்பற்றும் நிலை உருவாகியுள்ளது.
உலகளாவிய மெட்ரோ ரெயில் நெட்வொர்க்கில் சீனா 11,000 கிலோமீட்டருக்கும் அதிகமான வழித்தடங்களுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.
*சீனா: 11,000 கி.மீ. (முதலிடம்)
*அமெரிக்கா: 1,386 கி.மீ. (இரண்டாம் இடம்)
*இந்தியா: 1,170 கி.மீ. (மூன்றாம் இடம்)
தற்போது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வேறுபாடு வெறும் 216 கிலோமீட்டர் மட்டுமே. இந்தியாவில் நகர்ப்புற போக்குவரத்து தேவைகள் அதிகரித்து வருவதால், இந்த இடைவெளி மிக விரைவாகக் குறைந்து வருகிறது.
கடந்த 2014-ஆம் ஆண்டில் இந்தியாவில் வெறும் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரெயில் சேவைகள் பயன்பாட்டில் இருந்தன. அப்போது ஒட்டுமொத்த மெட்ரோ வழித்தடத்தின் நீளம் 245 கிலோமீட்டராக மட்டுமே இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தீவிர உள்கட்டமைப்பு மேம்பாடுகள் காரணமாக, தற்போது நாட்டின் 26 முக்கிய நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் வழித்தடத்தின் நீளம் 1,170 கிலோமீட்டராகப் பன்மடங்கு உயர்ந்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு நகரங்களில் தற்போது சுமார் 900 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் கட்டுமானப் பணிகள் பல்வேறு கட்டங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது கட்டுமானத்தில் உள்ள இந்த 900 கி.மீ. வழித்தடத்தில் ஒரு சிறிய பகுதி நிறைவடைந்து செயல்பாட்டுக்கு வந்தாலே, இந்தியா மிக எளிதாக 1,386 கி.மீ. கொண்ட அமெரிக்காவை முந்தி சர்வதேச தரவரிசையில் இரண்டாம் இடத்தைச் சென்றடையும்.
மெட்ரோ ரெயில் சேவைகளின் விரிவாக்கம் வெறும் போக்குவரத்து வசதியை மட்டும் வழங்காமல், நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியப் பங்காற்றி வருகிறது. தனிநபர் வாகனப் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் நகரங்களில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாடு கணிசமாகக் குறைகிறது. விரைவான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதால், வேலைக்குச் செல்வோர் மற்றும் வணிகச் செயல்பாடுகளுக்கான நேர விரயம் குறைக்கப்பட்டு நகர்ப்புறப் பொருளாதாரம் புதிய வேகத்தைப் பெற்றுள்ளது.