இஸ்ரோ தனியார்மயமாக்கப்படாது: ஊழியர்களின் அச்சத்தைப் போக்கி இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் திட்டவட்டம்

கடந்த 2020-ஆம் ஆண்டே விண்வெளித் துறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
 V.Narayanan
Published on
Summary

"எதிர்காலத்தில் ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள் தயாரிப்புப் பணிகளைத் தனியார் நிறுவனங்களே மேற்கொள்ளும்" என்று ‘இன்ஸ்பேஸ்’ தலைவர் பவன் கோயங்கா பேசியதாகச் செய்திகள் வெளியாயின.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ தனியார்மயமாக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இஸ்ரோ தலைவர் டாக்டர் வி.நாராயணன் விரிவான விளக்கம் அளித்துள்ளார். இந்திய விண்வெளித் துறை ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது என்றும், அங்கு பணிபுரியும் ஊழியர்களின் நலன்களும் கவலைகளும் முழுமையாக கேட்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்று வரும் ‘பெங்களூரு ஸ்பேஸ் எக்ஸ்போ’ நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் டாக்டர் வி.நாராயணன், "கடந்த 2020-ஆம் ஆண்டே விண்வெளித் துறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. தனியார் துறையினருக்கு வாய்ப்பளித்து, இந்தியாவின் ஒட்டுமொத்த விண்வெளித் தொழில்நுட்பக் கட்டமைப்பை விரிவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். இதற்காக இஸ்ரோ தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது என்பது முற்றிலும் தவறான செய்தி" என்று தெளிவுபடுத்தினார்.

மேலும், விண்கலன்கள் மற்றும் செயற்கைக்கோள்களை தயாரிக்கும் பணியில் பல நூற்றுக்கணக்கான இந்தியத் தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே இஸ்ரோவுக்குப் பெரும் உதவிகளை வழங்கி வருகின்றன என்பதையும், இது பல தசாப்தங்களாகத் தொடரும் நடைமுறைதான் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சமீபத்தில் விண்வெளித் துறை கட்டுப்பாட்டு அமைப்பான ‘இன்ஸ்பேஸ்’ தலைவர் பவன் கோயங்கா, "எதிர்காலத்தில் ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள் தயாரிப்புப் பணிகளைத் தனியார் நிறுவனங்களே மேற்கொள்ளும்" என்று பேசியதாகச் செய்திகள் வெளியாயின. இதைத் தொடர்ந்து, இஸ்ரோ அமைப்பைச் சேர்ந்த 9 ஊழியர் சங்கங்கள் இணைந்து தலைவர் வி.நாராயணனுக்கு செப்டம்பர் 4 அன்று 5 பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை எழுதின.

அந்தக் கடிதத்தில், இஸ்ரோவின் உற்பத்திப் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டால் அமைப்பின் முக்கியத்துவம் குறையுமா, பணி நியமனங்கள் பாதிக்கப்படுமா மற்றும் ஊழியர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் கோரியிருந்தனர். இந்தச் சூழலில்தான் இஸ்ரோ தலைவர் இதற்கான பதிலை அளித்துள்ளார்.

இஸ்ரோ வெளியிட்ட தகவல்களின்படி, வழக்கமான ராக்கெட் தயாரிப்பு மற்றும் செயற்கைக்கோள் உற்பத்திப் பணிகளைத் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மேற்கொள்ள ஊக்குவிக்கப்படும். இதனால் இஸ்ரோ தனது கவனத்தை அதிநவீன ஆராய்ச்சி மற்றும் தொலைநோக்குத் திட்டங்களில் முழுமையாகச் செலுத்த முடியும்.

குறிப்பாக, 2035-க்குள் இந்திய விண்வெளி மையம் அமைத்தல், 2040-க்குள் நிலவுக்கு இந்தியர்களை அனுப்பும் திட்டம், மீண்டும் பயன்படுத்தக்கூடிய நவீன ராக்கெட்டுகளை உருவாக்குதல் மற்றும் ஆழமான விண்வெளி ஆராய்ச்சிகள் போன்ற முக்கிய தொலைநோக்கு இலக்குகளை நோக்கி இஸ்ரோ மிக தீவிரமாகச் செயல்பட உள்ளது.

எனவே, தேசிய பாதுகாப்பு சார்ந்த முக்கிய உள்கட்டமைப்புகளும் முதன்மை விண்வெளி ஆராய்ச்சி உரிமைகளும் எப்போதும் இந்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்றும், இஸ்ரோவின் முக்கியத்துவம் எக்காலத்திலும் குறையாது என்றும் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com