அமித் ஷா, மோடி  
இந்தியா

துணை பிரதமர் ஆகும் அமித் ஷா?.. மழைக்கால கூட்டத்தொடருக்கு முன் அமைச்சரவை மாற்றம்?

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதிலாக மாற்றப்படலாம்

பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக, மத்திய அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக அமித் ஷா துணை பிரதமர் ஆக அதிகம் வாய்ப்புள்ளதாக கணிக்கணப்படுகிறது.

ஜூலை 20 ஆன் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ளதாக பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேற்று அறிவித்தார்.

இந்நிலையில் வரவிருக்கும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும் அமைச்சரவை மாற்றம் திட்டமிடப்பட்டுள்ளது.

மாற்றம்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதிலாக ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநரும், பிரதமர் மோடியின் முதன்மை செயலாளருமான சக்திகாந்த தாஸ் அந்த பதவியில் அமர்த்தப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும் தகவல் தொடர்பு மற்றும் ரெயில்வே அமைச்சகம் அஸ்வினி வைஷ்ணவ் வசம் உள்ள நிலையில், ரெயில்வே இலாகா வேறொருவருக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான நிதின் கட்கரிக்குகூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

ஆப்ரேசன் டைகர்

மகாராஷ்டிராவில் ஆப்ரேசன் டைகர் மூலம் உத்தவ் சிவசேனாவின் 6 எம்.பிகளை என்டிஏ கூட்டணி பக்கம் இழுப்பதில் மூளையாக செயல்பட்ட ஏக்நாத் ஷிண்டேவின் மகனும் கல்யாண் தொகுதி எம்பியுமான ஸ்ரீநாத் ஷிண்டேவுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

துணை பிரதமர்

இதை விட உன்னிப்பாகக் கவனிக்கப்படும் விஷயம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு 'துணைப் பிரதமர்' பதவி வழங்கப்படுவது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் கசிந்துள்ளது.

இதற்காக பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் தொடர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

மோடி

தற்போது துணை பிரதமர் பதவி இல்லாத நிலையில் அமித் ஷாவுக்காக அது ஏற்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் ஆர்எஸ்எஸ்சின் அழுத்தமும் இருக்கலாம் எனவும் ஒரு கருத்து நிலவுகிறது.

பிரதமர் மோடி 75 வயதை எட்டிய நிலையில் பாஜக கொள்கை படி அவர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவருக்கு அதில் தளர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.