இந்தியாவில் அரசியல் ஸ்திரத்தன்மையும் கொள்கை தொடர்ச்சியும் நிலவுவதாகவும், உலகம் இந்தியாவை வளர்ச்சி மற்றும் நம்பிக்கையின் ஒளிமயமான புள்ளியாக பார்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, வளர்ச்சி குறித்து இன்று பல கவலைகள் இருப்பதாகவும், வளங்கள் ஆயுதங்களாக பயன்படுத்தப்படும் மிக கடுமையான சூழலை உலகம் தற்போது கண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
"இந்த நம்பிக்கையற்ற சூழல் உலகிற்கு பல புதிய சவால்களை கொண்டுவருகிறது. இத்தகைய சூழலிலும், உலகம் இந்தியாவை வளர்ச்சி மற்றும் நம்பிக்கையின் ஒளிமயமான புள்ளியாகவே பார்க்கிறது.
நாங்கள் மக்கள் நலன் மற்றும் வளர்ச்சியை மையமாக கொண்ட கொள்கைகளை உருவாக்கி வருகிறோம். எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு மத்தியிலும் கூட, கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாங்கள் சீர்திருத்த மசோதாக்களை நிறைவேற்றி இருக்கிறோம்.
நாங்கள் நிர்வாகம் மற்றும் மக்களின் வாழ்க்கை சூழலை எளிதாக்குதல் ஆகியவற்றில் சீர்திருத்தங்களை செய்து வருகிறோம். சீர்திருத்தம் என்பது எங்களுக்கு ஒரு கட்டாயம் அல்ல; அது எங்கள் உறுதிப்பாடு மற்றும் ஆழ்ந்த நம்பிக்கை. மக்களின் வாழ்க்கை சூழலை எளிதாக்குவதற்கான கூடுதல் சீர்திருத்தங்களை நான் உறுதியளிக்கிறேன்," என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "அதிக உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் எங்கள் அரசு ஊக்கத்தொகைகளை வழங்கி வருகிறது. நாங்கள் வெறும் விதிமுறைகளை மட்டும் மாற்றவில்லை, விதிமுறைகள் தொடர்பான ஒட்டுமொத்த கொள்கையையுமே மாற்றுகிறோம்.
ஒரு சட்டத்தின் கீழ் வெளிப்படையாகத் தடை செய்யப்படாத செயல்களை செய்வதற்கு எந்தவித கட்டுப்பாடும் இருக்கக்கூடாது என்பதே எங்கள் அரசின் நம்பிக்கை," என்று அவர் கூறினார்.
மேலும், "இன்று 'மேக் இன் இந்தியா' மற்றும் 'ஆத்மநிர்பர் பாரத்' ஆகியவற்றை ஏளனம் செய்பவர்கள், தங்கள் முன்னோர்களின் அதே மனநிலையைத்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அணுகுமுறைக்கு பின்னால் ஒருவிதமான திரிபுபட்ட சிந்தனை இருந்தது," என்று அவர் கூறினார்.
ஒரு உதாரணத்தை குறிப்பிட்ட பிரதமர், முன்பு வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் இந்தியாவை வரைபடமாக்க முடிந்தாலும், அனுமதி இல்லாமல் யாரும் இந்தியாவின் வரைபடத்தை உருவாக்க முடியாது என்ற நிலை இருந்தது; ஆனால் தனது அரசு இந்த முறையை மாற்றியுள்ளது என்று கூறினார்.