தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டங்களை பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
உத்தரப் பிரதேச பாஜக மாநிலத் தலைவர் பங்கஜ் சௌத்ரியுடன் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்ற நிதின் நபின் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார்.
ராகுல் காந்தி அராஜக மனப்பான்மையுடன் இருப்பதாக குற்றம் சாட்டிய அவர், தனது நிலைப்பாட்டில் உண்மையாக இருந்தால், அவருக்கு தைரியம் இருந்தால் முதலில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்து காட்ட வேண்டும் என்றும் நிதின் நபின் சவால் விடுத்துள்ளார்.
"தேர்தல் ஆணையத்தை நிராகரிக்க ராகுல் காந்திக்கு என்ன உரிமை இருக்கிறது? அவருக்கு அவ்வளவு தைரியம் இருந்தால், முதலில் அவர் தனது ராஜினாமாவைச் சமர்ப்பிக்கட்டும். அதன்பிறகு, தேர்தல் ஆணையத்திற்கு எதிரான இந்த அராஜக நாடகங்கள் நடத்தட்டும்" என தெரிவித்தார் அவர்.
மேலும் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தேர்தல்களை நடத்தியது இதே மத்திய தேர்தல் ஆணையம்தான் என கூறிய நபின் தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக இருக்கும்போது மௌனம் காப்பதும், தோல்வி பயம் ஏற்படும்போது எதிராகத் திரும்புவதும் காங்கிரஸின் பாணி என சாடினார்.
வாக்காளர் பட்டியல் புதுப்பித்தல் செயல்முறை மூலம் ஊடுருவல்காரர்களை அகற்றுவதற்கு எதிராக அவர்களை பாதுகாக்கும் வகையில் ராகுல் காந்தியும் அவரது கூட்டாளிகளும் தெருக்களில் அமளியில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டினார்.
"இந்தியாவின் வளங்கள், செல்வம் மற்றும் மண் ஆகியவை இந்த நாட்டின் சாமானிய குடிமக்களுக்கு மட்டுமே சொந்தமானவை.
சட்டவிரோதமாக இங்கு நுழைந்த ஊடுருவல்காரர்கள் இந்தச் செல்வத்தின் மீது எந்த உரிமையையும் நிலைநாட்ட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
ராகுல் நாட்டின் வளங்களை அவர்களுக்குப் பகிர்ந்தளிக்க முயற்சிக்கிறார். ராகுல் யாருக்காகப் போராடுகிறார் என்பதை நாடு பார்க்கிறது," என்று அவர் கூறினார்.