இந்தியா

அமெரிக்கா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டால்; இந்தியா பாகிஸ்தானுடன் நிற்கும் - போட்டுடைத்த ராஜஸ்தான் பாஜக மாநில தலைவர்

பாகிஸ்தான் மீது பாஜகவுக்கு உள்ள பற்றை அம்பலப்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் சந்தீப் குப்தா குற்றம் சாட்டினார்.

இந்தியா பாகிஸ்தானுடன் துணை நிற்கும் என்று ராஜஸ்தான் பாஜக தலைவர் பேச்சு கண்டனத்துக்குள்ளாகி வருகிறது.

அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே போர் மூண்டால் இந்தியா பாகிஸ்தானுடன் துணை நிற்கும் என்று ராஜஸ்தான் பாஜக மாநில தலைவர் மதன் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுடன்

நேற்று ராஜஸ்தானில் ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய ரத்தோர், "நாம் அனைவரும் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, இன்று அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டால் , நாம் பாகிஸ்தானுடன்தான் இருப்போம், ஏனென்றால் அது நம் அண்டை நாடு," என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "ஆனால், நமக்குள் ஒரு பிரச்சினை வரும்போது, ​​நாம் நமது இந்தியாவுடன் நிற்கிறோம். சரிதானே? இதைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.

பாகிஸ்தான் மீதான பாஜகவின் பற்று

இந்த கருத்தை தொடர்ந்து பாகிஸ்தான் குறித்த பாஜக நிலைப்பாட்டை காங்கிரஸ் கேள்விக்குள்ளாகியுள்ளது.

காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது இந்தக் கருத்துக்களை தேசவிரோதமானவை என்று குறிப்பிட்டதோடு, பாஜக தனது ராஜஸ்தான் தலைவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கும் என்றும்வலியுறுத்தினார்.

"நமது வீரர்களையும் மக்களையும் கொல்லும் பயங்கரவாத நாடான பாகிஸ்தான் மீதான பாஜகவின் பற்று மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளது.

அமெரிக்காவும் பாகிஸ்தானும் போருக்குச் சென்றால், தான் பாகிஸ்தானுடன் இருப்பேன் என்று ராஜஸ்தான் பாஜக தலைவர் மதன் ரத்தோர் கூறுகிறார்," என ஷாமா தெரிவித்தார்.

மோடியும் ஷாவும் கூட பாகிஸ்தானுடன்..

"நரேந்திர மோடியும் அமித் ஷாவும் கூட பாகிஸ்தானுடன் இருக்கிறார்களா? இல்லையென்றால், இந்த தேசவிரோதிக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்" என்று அவர் மேலும் கூறினார்.

ரத்தோரின் கருத்துக்கள், 'பயங்கரவாத நாடு' என வர்ணித்த பாகிஸ்தான் மீது பாஜகவுக்கு உள்ள பற்றை அம்பலப்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் சந்தீப் குப்தா குற்றம் சாட்டினார்.

பாஜகவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரே மரபணு

ஆம் ஆத்மி கட்சியின் உத்தரப் பிரதேச துணைத் தலைவர் ராம் குப்தா, இந்தக் கருத்துக்கள் பாஜகவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள பொதுவான சித்தாந்த ஒற்றுமையை வெளிப்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.

"இன்னும் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா? உண்மை என்னவென்றால், பாஜகவும் பாகிஸ்தானும் ஒரே மரபணுவைப் பகிர்ந்து கொள்கின்றன.

ராஜஸ்தான் பாஜக தலைவர் மதன் ரத்தோர், 'அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டால்... நாங்கள் பாகிஸ்தானுடன்தான் இருப்போம்' என்று கூறுகிறார்" என குப்தா ராம் குப்தா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT