தேசிய தேர்வு முகமையின் புதிய இயக்குநராக ஆந்திராவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பிரசன்ன வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஐந்து ஆண்டுகள் இந்த பணியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரசன்ன வெங்கடேஷ் இதற்கு முன்னர் ஏலூர் மாவட்ட ஆட்சியராகவும், விஜயவாடா மாநகராட்சி ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.
நிர்வாகக் கட்டமைப்பை பலப்படுத்த பிரசன்ன வெங்கடேஷுடன் சேர்த்து, ஐபிஎஸ் அதிகாரி ரவிக்குமார் சிங் மற்றொரு இயக்குநராகவும், ஐஆர்எஸ் அதிகாரி அமித் சம்தாரியா இணை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
யுஜி - நீட் மற்றும் யுசிஜி நெட் உள்ளிட்ட தேசிய அளவிலான உயர்கல்வி நுழைவுத்தேர்வுகளில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, இந்த அதிரடி சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மேற்கொண்டுள்ளது.
மூன்று பேரும், மூன்று வாரங்களுக்குள் பொறுப்பேற்க வேண்டும் என்று பணியாளர் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் பணியில் சேரத் தவறினால், மத்திய பணியாளர் திட்டத்திலிருந்து தகுதிநீக்கம் செய்யப்படும் என்றும் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.