இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் பகீர்: மாணவர்களின் கண்முன்னே ஆசிரியை படுகொலை! காதலன் தற்கொலை

பாத்திமாவை மேல் தளத்தில் உள்ள நடைபாதைக்கு அழைத்துச் சென்ற சவுத், அங்கு அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில், மாணவர்களின் கண்முன்னே ஆசிரியை ஒருவர் அவரது முன்னாள் காதலனால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்கிம்பூர் கேரியில் உள்ள 'சில்ட்ரன்ஸ் அகாடமி' பள்ளியில் 26 வயதான நிஷாத் பாத்திமா என்ற பெண் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவரும், 27 வயதான முகமது சவுத் என்பவரும் கடந்த சில காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. எனினும், ஏற்பட்ட சில மனக்கசப்புகள் காரணமாக நிஷாத் பாத்திமா சமீபத்தில் இந்த உறவை முறித்துக் கொண்டார்.

காதல் முறிந்ததால் ஆத்திரமடைந்த முகமது சவுத், நேற்று முன்தினம் காலை சுமார் 11:30 மணியளவில் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்துள்ளார். தனது பையில் ரகசியமாக துப்பாக்கியை மறைத்து வைத்து எடுத்து வந்த அவர், நிஷாத் பாத்திமாவை வெளியே அழைத்துள்ளார்.

மாணவர்கள் முன்னே நடந்த கொடூரம்

பாத்திமாவை மேல் தளத்தில் உள்ள நடைபாதைக்கு அழைத்துச் சென்ற சவுத், அங்கு அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, பையிலிருந்த துப்பாக்கியை எடுத்து நிஷாத் பாத்திமாவை நோக்கி சுட்டுள்ளார். துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டு வகுப்பறையில் இருந்த மாணவர்களும் சக ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்து அலறி அடித்து ஓடிவந்தனர். பாத்திமா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்ததைக் கண்ட சவுத், உடனடியாக அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக்கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காவல்துறை விசாரணை

சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த லக்கிம்பூர் கேரி காவல்துறையினர், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சவுத் ஆசிரியையின் கையைப் பிடித்து இழுத்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது தெரியவந்தது. பட்டப்பகலில், பள்ளிக்கூட வளாகத்திற்குள்ளேயே நடந்த இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், இரு குடும்பத்தினரிடையே சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT