இந்தியா

Honeymoon சென்ற புதுமணத் தம்பதிக்கு நேர்ந்த சோகம் - பார்பிக்யூ சமைத்த போது நேர்ந்த விபரீதம்!

சொகுசு விடுதியின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்கு வங்காளத்தில் Hoonymoon கொண்டாடச் சென்ற புதுமணத் தம்பதியின் வாழ்வில் பார்பிக்யூ தீ விபத்து காரணமாகப் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. கணவன் கண்முன்னே தீப்பற்றி எரிந்ததில் இளம்பெண் ஒருவர் 60 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹனிமூன் பயணத்தில் நேர்ந்த விபரீதம்

மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் பகுதியைச் சேர்ந்த சவுவிக் தாஸ் என்பவருக்கும், நிகிதா சாஹா என்ற பெண்ணுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.

இந்த புதுமணத் தம்பதியினர் தங்களது ஹனிமூனை கொண்டாடுவதற்காக டார்ஜிலிங் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சிட்டாங் மலைவாசஸ்தலத்திற்குச் சென்றிருந்தனர்.

அங்குள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கியிருந்தபோது, அங்கிருந்த பார்பிக்யூ சமையல் வசதியைப் பயன்படுத்தத் திட்டமிட்டனர். சமையல் நடக்கும் இடத்திற்கு மிக அருகில் இந்த தம்பதியினர் அமர்ந்திருந்தனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் பற்றிய தீ

அங்கு பணிபுரிந்த விடுதி ஊழியர் ஒருவர், பார்பிக்யூ அடுப்பை வேகமாக எரியூட்டுவதற்காக ஒரு பிளாஸ்டிக் கேனில் இருந்த எரியக்கூடிய திரவத்தை அடுப்பில் ஊற்றியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாகத் தீ கொளுந்துவிட்டு எரியத் தொடங்கி, அருகில் அமர்ந்திருந்த நிகிதாவின் உடலுக்குப் பரவியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகிதாவின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

அதிர்ச்சியடைந்த கணவர் சவுவிக் தாஸும், சம்பந்தப்பட்ட ஊழியரும் தங்களது ஆடைகளைக் கழற்றி தீயை அணைக்கப் போராடினர். இருப்பினும் நிகிதாவின் உடல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

தற்போதைய நிலை

நிகிதாவின் உடலில் 60 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சொகுசு விடுதியின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT