இந்தியா

கடத்தல் எச்சரிக்கை? ஜெய்ப்பூரில் ஏர் இந்தியா விமானம் அவசரத் தரையிறக்கம்!

இந்த அவசர எச்சரிக்கைக்கான உண்மையான காரணம் குறித்து பாதுகாப்புப் படையினர் விசாரித்து வருகின்றனர்.

ஜெர்மனி நாட்டிலிருந்து டெல்லி நோக்கிப் பறந்த ஏர் இந்தியா விமானத்தில் கடத்தல் முயற்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பன்னாட்டு விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இதனால் விமான நிலையப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெர்மனி நாட்டின் ஃபிராங்க்ஃபர்ட் நகரத்திலிருந்து 300-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் டெல்லி நோக்கி ஏர் இந்தியா விமானம் (AI-2030) வந்து கொண்டிருந்தது. இந்த விமானம் மும்பை வான் பரப்பில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தின் விமானி வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு திடீரென ஒரு அவசரக் குறியீட்டை அனுப்பியுள்ளார்.

ஸ்குவாக் 7500 எச்சரிக்கை

விமானம் கடத்தப்படுவதை அல்லது சட்டவிரோதமாகக் கைப்பற்றப்படுவதை உணர்த்தும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ’ஸ்குவாக் 7500’ என்ற டிரான்ஸ்பாண்டர் ரகசியக் குறியீட்டை விமானி அனுப்பியுள்ளார். சில வினாடிகளுக்கு மட்டுமே இந்தச் சிக்னல் பெறப்பட்டாலும், விமானப் பாதுகாப்பு விதிமுறைகளின்படி இது தீவிரமான எச்சரிக்கையாகக் கருதப்படுவதால், உடனடியாகத் பாதுகாப்புப் படையினரும் விமான அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டனர்.

ஜெய்ப்பூரில் அவசரத் தரையிறக்கம்

உடனடியாக அஹமதாபாத் மற்றும் ஜெய்ப்பூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைகளின் அனுமதியுடன், அந்த விமானம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பத்திரமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. தரையிறங்கியதும் பாதுகாப்பு வழிமுறைகளின்படி, அந்த விமானம் உடனடியாக விமான நிலையத்தின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

விமானத்தில் இருந்த சுமார் 300 பயணிகளும் பாதுகாப்பாகக் கீழே இறக்கப்பட்டு, அவர்களது உடமைகளும் விமானமும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், பயங்கரவாத தடுப்புப் பிரிவு, காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு கண்டறிந்து செயலிழப்புப் பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த அவசர எச்சரிக்கைக்கான உண்மையான காரணம் குறித்து பாதுகாப்புப் படையினர் விசாரித்து வருகின்றனர். ஆரம்பகட்டத் தகவல்களின்படி, விமானி தவறுதலாக அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தச் பாதுகாப்பு குறியீட்டை அழுத்தியிருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT