இந்திய மதுபான ஆலைகள் எதிர்கொள்ள போகும் புதிய சவால்கள்: சிங்கிள் மால்ட் விஸ்கிக்கு தட்டுப்பாடு அபாயம்

விநியோக தடையை சமாளிக்கவும், ஒரே ஒரு விஸ்கி பிரிவை மட்டும் முழுமையாக சார்ந்து இருப்பதை தவிர்க்கவும் நிறுவனம் தனது தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்தி வருகிறது.
சிங்கிள் மால்ட் விஸ்கிக்கு தட்டுப்பாடு
Published on: 
Summary

உயர்தர சிங்கிள் மால்ட் விஸ்கி உற்பத்தியில் இந்திய நிறுவனங்கள் சவால்களை எதிர்கொள்கின்றன. வெளிநாட்டு ஸ்காட்ச் விஸ்கி இறக்குமதி விலை குறைவதால், உள்நாட்டு நிறுவனங்கள் கடும் போட்டியை சந்திக்கின்றன. புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து, மதுபான வரிசையை விரிவுபடுத்தும் முயற்சியில் அம்ருத் நிறுவனம், டெக்கீலா உற்பத்திக்காக மெக்சிகோ நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.

உலக அளவில் பிரீமியம் ரக மதுபானங்களை விரும்பி அருந்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் தயாரிக்கப்படும் உயர்தர சிங்கிள் மால்ட் விஸ்கி வகைகளுக்கு சந்தையில் மாபெரும் வரவேற்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் மதுப்பிரியர்களை அதிர வைக்கும் வகையில் நாட்டின் முன்னணி மதுபான உற்பத்தி நிறுவனம் ஒன்று மிக முக்கியமான எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளது. உயர்தர சிங்கிள் மால்ட் விஸ்கி விநியோகத்தில் வரவிருக்கும் ஆண்டுகளில் கடும் இறுக்கம் ஏற்படும் என்றும், இதன் காரணமாக 2030-ம் ஆண்டு வரை விற்பனை பெரிய அளவிலான வளர்ச்சியின்றி மந்தமாகவே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முதிர்ச்சி

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் முன்னணி மதுபான தயாரிப்பு நிறுவனமான அம்ருத் டிஸ்டில்ல ரீஸ், சந்தையில் நிலவும் அசுர தேவையை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடியாத சூழலில் உள்ளது. இந்திய விதிமுறைகளின்படி தரமான சிங்கிள் மால்ட் விஸ்கி தயாராக குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் முதிர்ச்சி காலம் அவசியமாகிறது.

அம்ருத் நிறுவனம் கடந்த ஆண்டில் தனது காய்ச்சி வடிகட்டும் திறனை 1.3 முதல் 1.4 மில்லியன் லிட்டராக உயர்த்தியது. மேலும் தற்போது நிறுவனத்திடம் சுமார் 75,000 ஒன்பது லிட்டர் சிங்கிள் மால்ட் விஸ்கி பெட்டிகள் கையிருப்பில் உள்ளன. இருப்பினும் இந்த கூடுதல் உற்பத்தி திறன் முழுமையாக முதிர்ச்சி அடைந்து, சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் முடிக்கப்பட்ட தயாரிப்புகளாக மாறுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரக்ஷித் ஜக்தாலே தெரிவித்துள்ளார். இதனால் உற்பத்தியை உடனடியாக விரைவுபடுத்தி சந்தை தேவையை பூர்த்தி செய்ய இயலாத நிலை நீடிக்கிறது.

மாற்றுப்பாதை

இந்த விநியோக தடையை சமாளிக்கவும், ஒரே ஒரு விஸ்கி பிரிவை மட்டும் முழுமையாக சார்ந்து இருப்பதை தவிர்க்கவும் நிறுவனம் தனது தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்தி வருகிறது. பிரீமியம் மதுபான சந்தையில் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை தக்க வைக்கும் நோக்கில் கலப்பு மால்ட் விஸ்கியை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதுமட்டுமின்றி வரவிருக்கும் டிசம்பர் மாதத்திற்கு முன்பாக வட இந்திய சந்தையை இலக்காக கொண்டு தனது பிரபல பியூஷன் பிராண்டை விட சுமார் 15 சதவீதம் குறைவான விலையில் புதிய சிங்கிள் மால்ட் விஸ்கியை களமிறக்க திட்டமிட்டுள்ளது. இந்த புதிய தயாரிப்பு குறைந்த விலையில் கிடைப்பதால், பரந்த அளவிலான புதிய வாடிக்கையாளர்களை சென்றடைய உதவி புரியும் என்று நிறுவனம் நம்புகிறது.

வர்த்தகம்

மற்றொரு புறம் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே கையெழுத்தாக உள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்நாட்டு மதுபான உற்பத்தியாளர்களுக்கு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவு விலை ஸ்காட்ச் விஸ்கி பிராண்டுகள் இந்திய சந்தையில் எளிதாக நுழைகின்றன. ஏற்கனவே சில இறக்குமதி செய்யப்பட்ட ஸ்காட்ச் வகைகளின் விலைகள் 15 சதவீதத்திற்கும் மேல் சரிந்துள்ளதால், வட இந்தியாவில் அம்ருத் நிறுவனத்தின் விற்பனை கணிசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த கடும் போட்டியை எதிர்கொள்ள உடனடியாக விலையை பெருமளவில் குறைக்காமல், பிற புதிய ரகங்களை அறிமுகம் செய்வதில் நிறுவனம் தீவிரமாக உள்ளது. விஸ்கி தவிர ரம் மற்றும் பிராந்தி வகைகளையும் விற்பனை செய்து வரும் அம்ருத், ஒரு புதிய டெக்கீலா பிராண்டை உருவாக்குவதற்காக மெக்சிகோ மதுபான ஆலைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முதற்கட்டமாக இந்த தயாரிப்பை மெக்சிகோவிலேயே பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து விட்டு, பின்னரே இந்தியாவிற்கு மாற்ற பரிசீலித்து வருகிறது.

போட்டி

கடந்த 2000-ம் ஆண்டு காலத்தில் அம்ருத் மற்றும் பால் ஜான் ஆகிய நிறுவனங்கள் தான் இந்தியாவில் முதன்முதலாக சிங்கிள் மால்ட் பிராண்டுகளை அறிமுகம் செய்த முன்னோடிகளாக திகழ்ந்தன. ஆனால் தற்போது இந்திய சந்தை மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளதால் புதிய போட்டியாளர்களின் வருகை அதிகரித்துள்ளது. பிக்காடில்லி அக்ரோ நிறுவனத்தின் இந்திரி மற்றும் கமெட் பிராண்டுகளும், உலகளாவிய முன்னணி நிறுவனங்களான பெர்னோட் ரிகார்ட் நிறுவனத்தின் லாங்கிட்யூட் 77 மற்றும் டயாஜியோ நிறுவனத்தின் கோடாவான் போன்ற புதிய பிராண்டுகளும் சந்தையில் களமிறங்கி கடும் போட்டியை ஏற்படுத்தி வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com