வட மாநிலங்களில் நிலவும் இந்த மோசமான வானிலை காரணமாக மக்கள் அனைவரும் வானிலை முன்னறிவிப்புகளைத் தொடர்ந்து கவனித்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, நாளை வட இந்தியாவின் பல மாநிலங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக மலைப் பிரதேசமான உத்தரகாண்ட் மாநிலத்தில் மிகக் கடுமையான மழைப்பொழிவு இருக்கும் என்பதால் அம்மாநிலத்திற்கு உச்சகட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன், டெஹ்ரி, பௌரி மற்றும் ஹரித்வார் ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்பதால் வானிலை மையம் 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படுவதற்கும், சாலைகள் அடைபடுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். ஆற்றுப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதால், ஆறுகளின் கரைகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும், தேவையற்ற பயணங்களை ஒத்திவைக்குமாறும் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் வடகிழக்கு பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உத்தரப் பிரதேசத்தை நோக்கி நகர்வதால், அம்மாநிலத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சில மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள நொய்டா, குருகிராம், ஃபரிதாபாத் உள்ளிட்ட என்.சி.ஆர் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் நிலவும் இந்த மோசமான வானிலை காரணமாக மக்கள் அனைவரும் வானிலை முன்னறிவிப்புகளைத் தொடர்ந்து கவனித்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஆபத்தான பகுதிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்றும், குறிப்பாகப் பயணங்கள் திட்டமிடுபவர்கள் சாலை நிலவரங்களை அறிந்து பயணத்தைத் தொடங்குமாறும் அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.