ஹரியானாவின் முன்னணி தொழில்நகரமான குருகிராமில் அண்மையில் பெய்த கனமழையால் நகரின் முக்கியச் சாலைகளும், குடியிருப்புப் பகுதிகளும் நீரில் மூழ்கிப் பெரும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இந்த நிலையில், நகரின் தற்போதைய நிலைக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் தவறான உள்கட்டமைப்பு திட்டமிடலே காரணம் என குருகிராமின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ராவ் இந்தர்ஜித் சிங் கூறியிருப்பது பெரும் காரசாரமான அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
நகரின் வெள்ளப் பெருக்கு குறித்துப் பேசிய மத்திய இணை அமைச்சரும் குருக்கிராமின் எம்பியுமான ராவ் இந்தர்ஜித் சிங், "தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகள் அனைத்தும் காயத்திற்கு போடப்படும் சாதாரண பிளாஸ்டர் போன்ற தற்காலிகமான தீர்வே ஆகும். ஆரவல்லி மலையிலிருந்து யமுனை நதிக்குத் தண்ணீரை எடுத்துச் சென்ற பழமையான இயற்கை வடிகால்களை அடைத்து, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களே தற்போதைய வெள்ளப் பெருக்குக்கு முக்கியக் காரணம்." என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு நிரந்தரத் தீர்வாக, மெட்ரோ ரெயில் பாதைகளைப் போல பழைய வடிகால் பாதைகளின் வழியே நிலத்தடி சுரங்கப்பாதைகளை (Underground Tunnels) அமைத்து மழைநீரை வெளியேற்ற வேண்டும் என்றும், அதற்கான நிதியைத் திரட்டும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாஜக எம்பியின் இந்தக் குற்றச்சாட்டிற்கு காங்கிரஸ் கட்சி உடனடி மற்றும் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளது. குருக்கிராமில் கடந்த சில ஆண்டுகளில் உள்கட்டமைப்பிற்காக ரூ.1,400 கோடிக்கு மேல் செலவழிக்கப்பட்டும் நகரின் கட்டமைப்பு முற்றிலுமாகச் சீர்குலைந்துள்ளதாக காங்கிரஸ் சாடியுள்ளது.
மேலும், 2009-ஆம் ஆண்டு முதல் குரு்கிராமின் நாடாளுமன்ற உறுப்பினராக ராவ் இந்தர்ஜித் சிங் பொறுப்பில் இருந்து வருகிறார். அதுமட்டுமன்றி, அவர் குற்றம்சாட்டும் அதே காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் அவரே எம்பியாகவும், ஹரியானா மற்றும் மத்திய அரசில் அமைச்சராகவும் பதவி வகித்தார். 2014-ல் பாஜகவிற்கு மாறிய அவர், தொடர்ச்சியாக குருகிராம் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வரும் நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவியில் இருந்துவிட்டு முந்தைய ஆட்சியைக் குற்றம்சாட்டுவது தனது சொந்தத் தோல்வியை மறைக்கும் செயலாகும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
குருகிராமில் சில நிமிடங்களில் கொட்டித் தீர்த்த 70 மி.மீ முதல் 75 மி.மீ வரையிலான கனமழையால் நகரின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் 2 அடிக்கும் மேலாக மழைநீர் தேங்கியதால் பள்ளிக் குழந்தைகள் சென்ற பேருந்துகள் மற்றும் அவசர ஆம்புலன்ஸ் வாகனங்கள் மணி கணக்கில் போக்குவரத்தில் சிக்கித் தவித்தன. இதனால் பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தின.
இதற்கிடையே, டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலை அருகே இஃப்கோ சவுக்கில் பிரதான கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 10 அடி அகலத்திற்குப் பாதாளப் பிளவு ஏற்பட்டு வீதி உள்வாங்கியது. இதனால் போக்குவரத்தும், சில பகுதிகளில் குடிநீர் விநியோகமும் முற்றிலுமாகத் தடைபட்டுள்ளது. பல நூறு கோடி செலவழிக்கப்பட்டும் ஒவ்வொரு மழைக்காலத்திலும் குருக்கிராம் நகரம் தத்தளிப்பது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.