குருக்ராமை மீண்டும் சூழ்ந்த வெள்ளம்: நகரின் உள்கட்டமைப்பு சீர்குலைவுக்கு யார் காரணம்?

நகரின் உள்கட்டமைப்பு ஒரே ஒரு நகராட்சி அமைப்பின் கீழ் செயல்படாமல், பல அரசு நிறுவனங்களிடையே பிரிக்கப்பட்டுள்ளது.
Gurugram Floods
Published on

இந்தியாவின் தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாகத் திகழும் குருக்ராம் நகரில், நேற்று பெய்த கனமழையைத் தொடர்ந்து பிரதான சாலைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. இதனால் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, நகரம் ஸ்தம்பித்தது.

பள்ளிப் பேருந்துகளில் முடங்கிய குழந்தைகள்

சுபாஷ் சௌக் மற்றும் சோஹ்னா சாலை ஆகிய பகுதிகளில் நீர் தேங்கியதால், பள்ளிப் பேருந்துகள் நான்கு மணி நேரத்திற்கும் மேலாகச் செல்ல முடியாமல் முடங்கின. உணவு மற்றும் தண்ணீர் வசதியின்றி வாகனங்களுக்குள்ளேயே குழந்தைகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. பெற்றோர்களும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், குழந்தைகளை உடனே மீட்க முடியாமல் தவித்தனர்.

Work From Home அறிவுறுத்தல்

நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மாவட்ட பேரிடர் மேலாண்மை வாரியம் (DDMA) தனியார் நிறுவனங்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு உடனடியாக வீடுகளில் இருந்தே பணிபுரியும் முறையை அமல்படுத்துமாறு அறிவுறுத்தியது. சாலை சீரமைப்பு மற்றும் வடிகால் அடைப்புகளை நீக்கும் பணிகளைச் சீராக மேற்கொள்ளவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குருக்ராம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும்போது எந்த அமைப்பைக் குற்றம் சாட்டுவது என்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. நகரின் உள்கட்டமைப்பு ஒரே ஒரு நகராட்சி அமைப்பின் கீழ் செயல்படாமல், பல அரசு நிறுவனங்களிடையே பிரிக்கப்பட்டுள்ளது.

GMDA: பிரதான நகரக் உள்கட்டமைப்பு, பெரிய வடிகால்கள் மற்றும் முதன்மைச் சாலைகளைப் பராமரிக்கிறது.

MCG: குடியிருப்புப் பகுதிகள் மற்றும் உள்ளூர் சாலைப் பராமரிப்புப் பொறுப்புகளைக் கொண்டுள்ளது.

HSVP & HSIIDC: திட்டமிடப்பட்ட துறைகள் மற்றும் தொழிற்பேட்டைப் பகுதிகளின் உள்கட்டமைப்பை நிர்வகிக்கின்றன.

NHAI & PWD: தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பிற முக்கிய இணைப்புச் சாலைகளைப் பராமரிக்கின்றன.

ஒருங்கிணைப்பு இல்லாததால் ஏற்படும் பாதிப்புகள்

ஒரு சாலை ஒரு அமைப்பின் பராமரிப்பிலும், அதன் அருகிலுள்ள சாக்கடை வடிகால் மற்றொரு அமைப்பின் கட்டுப்பாட்டிலும் இருப்பதால், அவசரக் காலத்தில் துரித நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. ஒரு சில மணி நேர கனமழைக்கே நகரின் ஒட்டுமொத்தப் போக்குவரத்தும் செயலிழப்பது, இந்த அமைப்புகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாததையே காட்டுகிறது. "மில்லினியம் சிட்டி" என்று அழைக்கப்படும் குருக்ராம், முறையான வடிகால் வசதியும் ஒருங்கிணைந்த நிர்வாக அமைப்பும் இல்லாததால் ஒவ்வொரு மழைக்காலத்திலும் நிலைகுலைந்து வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com