அண்மையில் குஜராத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. பல்வேறு இடங்களில் பாஜக வெற்றியை பதிவு செய்தது. அதற்கடுத்தபடியாக காங்கிரஸ் பல இடங்களை கைப்பற்றியது. ஆம் ஆத்மி 3ஆம் இடம் பிடித்தது.
குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் ஜம்பூசர் தாலுகா பஞ்சாயத்துக்கு உட்பட்ட தேஹ்காம் தொகுதியில் பாஜக சார்பில் ஷகீல் மாலெக் என்பவர் போட்டியிட்டார்.
தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் சொஹேல் ஷேக் 2,100 வாக்குகள் வித்தியாசத்தில் ஷகீல் மாலெக்கை தோற்கடித்தார்.
தோல்வியால் ஆத்திரமடைந்த ஷகீல் மற்றும் அவரது தந்தை காலிக் மாலெக் ஆகியோர், கிராம மக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை எனக் கூறி சுமார் 10,000 மக்கள் வசிக்கும் தேஹ்காம் கிராமத்தின் குடிநீர் விநியோகத்தைத் துண்டித்தனர்.
ஏப்ரல் 28ம் தேதி முதல் கிராம மக்கள் குடிநீர் இன்றி தவித்தனர். கிராமத் தலைவர் கோரிக்கை விடுத்தும், தந்தை-மகன் இருவரும் குடிநீர் இணைப்பை வழங்க மறுத்துவிட்டனர்.
இறுதியில் வெள்ளிக்கிழமை மாலை போலீசாரின் தலையீட்டிற்குப் பிறகு கிராமத்திற்கு மீண்டும் குடிநீர் விநியோகம் சீரமைக்கப்பட்டது.
தோல்விக்குப் பிறகு, ஷகீல் மற்றும் அவரது தந்தை கையில் வாள்களுடன் கிராமத்தைச் சுற்றி வந்து மக்களை அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து காலிக் மாலெக் மற்றும் ஷகீல் மாலெக் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.